புதிதாக உருவாகும் இரு காற்றழுத்த தாழ்வு பகுதிகள்.. எங்கெல்லாம் கனமழை? - பிரதீப் ஜான் விளக்கம்

புதிதாக உருவாகும் இரு காற்றழுத்த தாழ்வு பகுதிகள்.. எங்கெல்லாம் கனமழை? - பிரதீப் ஜான் விளக்கம்

தமிழகத்திற்கு வடகிழக்கு பருவமழை கடந்த 16 ஆம்தேதியன்று தொடங்கி பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அரபிக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உறுவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழையின் தீவிரம் எப்படி இருக்கும்? எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது ? விரிவாகப் பார்க்கலாம்.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தக் காற்றழுத்தத் தாழ்வு பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாக வரும் அக்டோபர் 22ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை அல்லது மிகக் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தருமபுரி, சேலம், நாமக்கல்​ ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Northeast Monsoon update
மழை - கோப்பு படம்pt web

சென்னையைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் ‘சென்னையை நோக்கி மழை மேகங்கள் நகர்ந்து வருகின்றன. இந்த மேகங்கள் வலுவாக இருப்பதால் இரவு சென்னைக்கு மிகவும் நல்ல மழையாக இருக்கும். நேற்று மதியம் தொடங்கி இரவு வரை வடசென்னை மற்றும் சென்னையின் புறநகர் பகுதியில் பரவலாக கனமழை பெய்திருந்தது.

தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் நல்ல மழை பெய்து வருகிறது. அடுத்த சுற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை பெய்யும். மழை மேகங்கள் அடுத்த கட்டமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரியை நோக்கி நகரும். டெல்டா முதல் புதுச்சேரி வரையிலான கடலோர மாவட்டங்களில் இரவு தொடங்கி அதிகாலை வரை மழை பெய்யும்” என்று தெரிவித்திருக்கிறார். பகலில் மழையின் தன்மை அவ்வளவு தீவிரமாக இருக்காது என்றும் பெரும்பாலும் இரவு நேரங்களில் மழை பெய்யவே அதிக வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்திருக்கிறார்.

Heavy rain
மழைpt web

அதேபோல தீபாவளியன்று மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். வடகிழக்கு பருவமழை தீவிரம் பெற்று வருவதால் மக்கள் வெளியில் செல்லும்போது குடை, ரெயின்கோட் அல்லது தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தத் தவற வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com