ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அரசு மருத்துவர்கள் இருவர் ஆஜர்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை ஆணையம் முன், அரசு மருத்துவர்கள் இருவர் இன்று ஆஜராகி உள்ளனர்.
சென்னை சேப்பாக்கம் கலச மஹாலில் நேற்று தனது விசாரணையை தொடங்கிய ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி, முதல் நபராக திமுகவைச் சேர்ந்த மருத்துவர் சரவணனிடம் விசாரணை நடத்தினார். அப்போது, ஜெயலலிதா மரணம் தொடர்பான உண்மைகளை வெளிக்கொண்டுவர யாரிடம் வேண்டுமானாலும் விசாரணை நடத்தப்படும் என்றும், உரிய ஆவணங்களை எப்போது தாக்கல் செய்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் ஆறுமுகசாமி கூறினார். அரசு மருத்துவர்கள் இரண்டு பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஆறுமுகசாமி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சம்மனை அடுத்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் நாராயணபாபு, பொதுமருத்துவத்துறை இயக்குநர் மயில்வாகனன் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். விசாரணைக்கு பொது மருத்துவத்துறை இயக்குநர் அழைக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்ன, அவர் எதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற தகவலைப் பெறுவதற்காக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், இவர்கள் இருவரும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழுவில் இடம்பெற்றவர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இரண்டாவது நாளாக திமுகவின் மருத்துவர் சரவணனிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. கைரேகை தொடர்பான கூடுதல் ஆவணங்களையும் தாக்கல் செய்ய உள்ளதாகத் தெரிகிறது. ஆறுமுகசாமி ஆணையத்தில், இதுவரை 70க்கும் அதிகமானோர் தகவல் அளித்துள்ளனர். தீபா, மாதவன், உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.