
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியையடுத்த புத்துக்கோவில் பகுதியில் உள்ள பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் பேனரொன்று வைக்கப்பட்டிருந்தது.
அந்த பேனரை அதே பகுதியைச் சேர்ந்த சிலர் கிழித்துள்ளனர். இதுகுறித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு, காவல்துறை அனுமதியோடு அங்கேயே புதிய பேனரை மீண்டும் வைத்துள்ளனர்.
மற்றொருபக்கம் பேனர் கிழித்த புகாரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை முடிவில் புத்துக்கோவில் பகுதியைச் சேர்ந்த குமார் மற்றும் கௌதம் என்ற இருவரை கைது செய்தனர். மொத்தம் 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கைது செய்தவர்களை விடுவிக்கக் கோரி கைதான இருவரின் உறவினர்கள் புத்துக்கோவில் பகுதியில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியபின்னரும் போராட்டம் தொடர்ந்ததால் அங்கு கூடுதல் போலீஸ் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் புஷ்பராஜ் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கலைத்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள கடைகளை அடைக்கவும் உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற நாட்றம்பள்ளி வட்டாட்சியர் குமார் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் அங்கு நேரில் ஆய்வு செய்தனர்.
ஆய்வு முடிவில், விடுதலை சிறுத்தை கட்சியினர் புதிதாக வைத்த அம்பேத்கர் புகைப்படத்துடன் கூடிய பேனரை வட்டாட்சியர் குமார் தலைமையில், போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த் துறையினர் அகற்றினர். இனி அனுமதி பெறாமல் நாட்றம்பள்ளி தாலுகாவில் சுவரொட்டிகள், பேனர்களை ஒட்டக்கூடாது என வட்டாட்சியர் குமார் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து மேலும் ஏதும் பிரச்னை ஏற்படாமல் இருக்க, அப்பகுதி முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.