அதிமுக எம்.பி.க்கள் இருவர் சட்டமன்றத் தேர்தலில்வெற்றி- எந்தப் பதவியை ராஜினாமா செய்வார்கள்?

அதிமுக எம்.பி.க்கள் இருவர் சட்டமன்றத் தேர்தலில்வெற்றி- எந்தப் பதவியை ராஜினாமா செய்வார்கள்?
அதிமுக எம்.பி.க்கள் இருவர் சட்டமன்றத் தேர்தலில்வெற்றி- எந்தப் பதவியை ராஜினாமா செய்வார்கள்?

அதிமுகவின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில் அவர்கள் தங்களுக்கு உள்ள இரு பதவிகளில் எதை தேர்வு செய்வார்கள்? எந்த பதவியை ராஜினாமா செய்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களான கே.பி.முனுசாமி வேப்பனஹள்ளி தொகுதியிலும், வைத்தியலிங்கம் ஒரத்தநாடு தொகுதியிலும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். இரண்டு மன்றங்களிலும் ஒரே நேரத்திலே உறுப்பினர்களாக இருக்க முடியாது என்பதால் ஏதாவது ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வைத்தியலிங்கம் கடந்த ஐந்து ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். அவருக்கு ஓராண்டு மட்டுமே மீதமிருப்பதால், அவர் எம்எல்ஏ பதவியை தேர்வு செய்யலாம் என அதிமுகவை சேர்ந்த சிலர் கருதுகின்றனர்.

 கே.பி.முனுசாமி கடந்த ஆண்டு தான் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு இன்னும் ஐந்து வருடங்கள் மீதமிருப்பதால், மாநிலங்களவை உறுப்பினராக தொடர்வதா அல்லது பதவியை ராஜினாமா செய்து சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றுவதா என்பதை முடிவு செய்ய வேண்டும். ஒருவேளை இருவரும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தால் ஒரத்தநாடு, வேப்பனஹள்ளி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும். எம்.பி பதவியை ராஜினாமா செய்தால் அவர்களின் மீதமுள்ள பதவிக் காலத்திற்கு மட்டுமே தேர்தல் நடத்தப்படும்.

அதாவது 6 வருட பதவிக்காலம் இவர்களுடைய இடத்தில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு கிடைக்காது. உதாரணத்திற்கு வைத்தியலிங்கம் மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்து அந்த இடத்துக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டால் அதில் தேர்ந்தெடுக்கப்படுபவர் கிட்டதட்ட ஒரு வருடம் மட்டுமே மாநிலங்களவை உறுப்பினராக பணிபுரிய முடியும். அதிலும் குறிப்பிடப்படும் விஷயம் ஒன்று இருக்கிறது.

தற்போது புதிய சட்டசபை பதவி காலம் தொடங்குவதால் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களே மாநிலங்களவை காலியிடங்களுக்கான இடைத்தேர்தலில் வாக்களிப்பார்கள். அத்தகைய சூழ்நிலையில் தற்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைப் படி திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு பலம் அதிகமாக இருக்கிறது. ஆகவே மாநிலங்களவை காலியிடங்கள் திமுக வசம் செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும். எனவே பல்வேறு முக்கிய அம்சங்களை கருத்தில் கொண்டே இருவரும் சட்டமன்ற உறுப்பினர்களாக செயல்பட வேண்டுமா அல்லது மாநிலங்களவை உறுப்பினர்களாக தொடர வேண்டுமா என்பதை அதிமுக தலைமை முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com