விவசாய நிலத்தில் மலைப்பாம்புகள் - வனத்துறையினர் வராததால் களத்தில் இறங்கிய இளைஞர்கள்
வாணியம்பாடி அருகே விவசாய நிலத்திற்குள் சுமார் 15 அடி நீளமுள்ள 2 மலைப்பாம்புகள் நுழைந்ததை பார்த்து அங்கு வேலை செய்துகொண்டிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த குந்தாணிமேடு கிராமத்தில் அசோகன் என்பவரது நிலத்தில் அப்பகுதி மக்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது அந்த விவசாய நிலத்தில் சுமார் 15 அடி நீளமுள்ள இரண்டு மலைப்பாம்புகள் வந்துள்ளது. இதை கண்டு அங்கு வேலை பார்த்து வந்த அனைவரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
பின்னர் அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். ஆனால் வனத்துறையினர் வர தாமதமானதால் அப்பகுதி இளைஞர்கள் மற்றும்பொதுமக்கள் நீண்ட நேரம் போராடி 2 மலைப்பாம்புகளையும் பிடித்தனர். பின்னர், 2 மலைப்பாம்புகளையும் வாணியம்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு கொண்டு சென்று கிராம மக்கள் ஒப்படைத்தனர்.
அப்போது, அங்கு வந்த வனத்துறை ஊழியரிடம் கிராம மக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு வனத்துறை ஊழியர் அப்படிதான் ஆகும் உங்களால் முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள் என்று அலட்சியமாக பதில் அளித்ததால் கிராம மக்கள் வனத்துறை ஊழியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.