பெரம்பூரில் போட்டியிடுகிறாரா விஜய்?.. தவெக நிர்வாகிகள் சூசகம்!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவற்றுடன் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு தேர்தலை சந்திக்கவுள்ள தமிழக வெற்றிக் கழகமும் களத்தில் இருக்கிறது. தவெக இத்தேர்தலில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது எனக் கூறப்படும் நிலையில், இத்தேர்தலில் கடுமையான போட்டி நிலவக்கூடும்.
இந்த சூழலில்தான், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என அறிவித்தும் எந்தக் கட்சிகளும் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணிக்கு வராத நிலையில், தவெக தனித்து களம் காணவே அதிக வாய்ப்பு இருக்கிறது. இதற்கிடையில், தவெக தலைவர் விஜய் எந்தத் தொகுதியில் போட்டியிடவுள்ளார் என்ற எதிர்ப்பார்ப்பு அக்கட்சியினர் உட்பட பொதுமக்கள் மனதிலும் எழுந்து வருகிறது. இந்நிலையில், வடசென்னையில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிட வாய்ப்பிருக்கிறது என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
பெரம்பூர் தொகுதியில் இன்று தவெக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், தவெக மாநில நிர்வாகிகள், என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் மற்றும் ராஜ்மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் விஜய் பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த தீரமானத்தை ஆதவ் அர்ஜுனா முன்மொழிய, தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் வழிமொழிந்திருக்கிறார்.
தொடர்ந்து, ஆதர்வ் அர்ஜுனா பேசுகையில், தவெக தலைவர் விஜயின் எண்ண ஓட்டம் பற்றி எனக்குத் தெரியும். அவர், வடசென்னையில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் தான் போட்டியிட வாய்ப்புள்ளது. ஏனென்றால், 50, 60 வருடங்களாக வடசென்னையை ஒதுக்கி திமுக செய்த சூழ்ச்சியை முறியடிக்கக் கூடிய ஒரே ஒருவர் தவெக தலைவர் விஜய் தான் எனவும் பேசியிருக்கிறார்.
இந்த நிலையில், இத்தீர்மானத்தின் மூலம் விஜய் பெரம்பூரில் போட்டியிட உள்ளார் என்பது சூசகமாக சொல்லப்பட்டிருக்கிறதா? என்ற கேள்வி எழுந்து வருகிறது. அதேபோல, அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ள வி.எஸ். பாபு ”முதலமைச்சரை தேர்ந்தெடுக்கும் தொகுதி பெரம்பூர் தான்” என சமீபத்தில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
