அடித்து நொறுக்கும் வார்த்தைகள்.. பரந்தூருக்கு விஜய் வர காரணமான சிறுவன்.. யார் இந்த ராகுல்..?
பரந்தூரில் விமான நிலையம் அமைய உள்ளதற்கு எதிராக போராடி வரும் மக்களைச் சந்திப்பதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பரந்தூர் பகுதிக்கு சென்றிருந்தார்.
பொடவூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு வந்தடைந்த விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அங்கு பேசிய விஜய், “கிட்டத்தட்ட 910 நாட்களுக்கும் மேல் உங்க மண்ணுக்காக போராடிக்கொண்டு இருக்கிறீர்கள்., உங்கள் போராட்டத்தைப் பற்றி ராகுல் என்ற சிறுவன் பேசியதைக் கேட்டேன். அந்த குழந்தையின் பேச்சு மனதை ஏதோ செய்தது. உடனே உங்கள் எல்லோரையும் பார்க்க வேண்டுமென தோன்றியது. உங்களுடன் பேச வேண்டும் என தோன்றியது. உங்கள் எல்லோருடனும் நான் நிற்பேன், தொடர்ந்து நிற்பேன்.” என்று பலவற்றை பேசியிருந்தார்.
இந்தநிலையில், விஜய் குறிப்பிட்ட ராகுல் புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டியை அளித்துள்ளார்.
அதில் , “என் பெயர் ராகுல். நான் எட்டாம் வகுப்பு படிக்கிறேன். ஏகனாபுரம் ஊர் எங்களுக்கு வேண்டும். இந்த ஊரை அழித்துவிட்டால் எங்கு சென்று நாங்கள் வாழ்வோம். படிப்போம், உணவு உண்போம். ஸ்டாலின் ஐயா அவரது அப்பாவின் நினைவாக பேனா சின்னம் வைக்கிறார் . அதுபோல இந்த ஊரை எங்களுக்கு வைக்க தெரியவில்லையா? .. என்று பேசியிருக்கிறார்.