
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. தமிழக வெற்றிக் கழகமும் தேர்தலை சந்திக்க தீவிரமாக தயாராகி வரும் நிலையில் தவெக தலைவர் விஜயின் பரப்புரைப் பயணமும் பேசுபொருளாகியிருக்கிறது.
இன்று புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் நிலையில் புதுச்சேரியை சார்ந்தவர்கள் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சார்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் கியூ ஆர் கோடு அட்டை வைத்திருப்பவர்களை மட்டுமே காவல்துறையினர் அனுமதித்து வருகின்றனர். அனுமதி அட்டை இல்லாதவர்களை காவல்துறையினர் உள்ளே அனுமதிக்க மறுத்ததன் காரணமாக தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களுக்கும், காவலர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. காவலர்களும் அதிகமான கெடுபிடிகளை விதித்ததால் உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
பாதுகாப்பு பணியில் 700 போலீசார் ஈடுபட்டுள்ளனர். தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் பாதுகாப்பு முன்னேற்பாடுகளையும், தொண்டர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதையும் பார்வையிட்டார். அப்போது அடையாள அட்டை வைத்திருப்பவர்களை வேகமாக உள்ளே அனுமதிக்குமாறு காவல்துறையினரை கேட்டுக்கொண்டார்.