5 தொகுதி இடைத்தேர்தல்.. முதல்வர் விஜயின் அதிரடித் திட்டம்?
திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர், பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தவெக தேர்தல் பணிகளை இப்போதே தீவிரப்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்ற பின், முதல்வர் விஜய் சுமார் 1,500 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான திட்டங்களை அறிவித்திருந்தார். அதே பாணியில், வரும் நவம்பர் 2 அன்று விராலிமலை சட்டமன்ற தொகுதி அடங்கியுள்ள புதுக்கோட்டை மாவட்டத்திலும், நவம்பர் 3 அன்று பெருந்துறை தொகுதி அடங்கியுள்ள ஈரோடு மாவட்டத்திலும் அரசு விழாக்களை நடத்தி, புதிய திட்டங்களைத் தொடங்குவதோடு இடைத்தேர்தலுக்கான வலுவான சிக்னலையும் வழங்கிடத் திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர்.
திருச்சி கிழக்கு முதல்வர் விஜய் ஏற்கெனவே வெற்றி பெற்ற தொகுதி. ராஜிநாமா செய்த பிறகு, அந்தத் தொகுதிக்கு முதல்வர் விஜய் சென்று வந்து விட்டார். கூடவே திருச்சி திமுகவின் முகங்களான கே.என்.நேரு, அன்பில் மகேஸ் போன்றோரை வழக்குகள் துரத்துகின்றன. எனவே அங்கு தங்களுக்கு மீண்டும் வெற்றி வாய்ப்பு உள்ளதாக தவெக கருதுகிறது. அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, ஜெயக்குமார் போன்றோர் தங்களது தொகுதிகளில் தனிப்பட்ட செல்வாக்குடன் திகழ்பவர்கள். எனவே, அந்த 4 தொகுதிகளிலும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைக் கைப்பற்ற தவெக இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிகிறது.
கரூர் சட்டமன்றத் தொகுதியில் 2016 மற்றும் 2026 ஆகிய இரண்டு முறை எம். ஆர்.விஜயபாஸ்கர் வெற்றி பெற்றுள்ளார். கடந்த தேர்தலில்கூட 71,542 வாக்குகள் பெற்று தனது செல்வாக்கை நிரூபித்திருந்தார். சி.விஜயபாஸ்கர் நான்கு முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்ற தொகுதி விராலிமலை. கடந்த தேர்தலிலும் 51.87 சதவீத வாக்குகளுடன் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குளைப் பெற்று தனது செல்வாக்கை நிரூபித்திருந்தார். அதேபோல் அம்பாசமுத்திரம் தொகுதியில் இசக்கி சுப்பையா கடந்த இரு சட்டமன்றத் தேர்தல்களிலும் அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர். கடந்த தேர்தலிலும் 65,589 வாக்குகள் பெற்றிருந்தார்.
பெருந்துறை தொகுதியில் சட்டமன்ற பொதுத் தேர்தலில் தவெக மூன்றாம் இடத்தை பிடித்தது. இருந்தபோதும், முதல் மூன்று இடங்களை பிடித்த அதிமுக, திமுக, தவெக இடையே தலா 10 ஆயிரம் வாக்குகள் மட்டுமே வித்தியாசம் இருந்தது. இந்த நிலையில், 2021, 2026 தேர்தல்களில் வெற்றிபெற்ற எஸ். ஜெயக்குமார் தவெகவுக்கு வந்திருப்பது, அந்தக் கட்சிக்கு நம்பிக்கையைத் தந்துள்ளது. தேர்தல் நேரத்தில் பரப்புரை செய்வதோடு மட்டுமின்றி, தேர்தல் அறிவிப்புக்கு முன்பே அரசு இயந்திரத்தின் மூலம் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் முழுதாகத் தயாராக தவெக வியூகம் அமைத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

