\
தவெகவினர் மற்றும் செய்தியாளர்களிடயே மோதல்
தவெகவினர் மற்றும் செய்தியாளர்களிடயே மோதல்Pt web

சேலம் | தவெகவினர் மற்றும் செய்தியாளர்கள் இடையே மோதல்.. என்ன நடந்தது?

தவெக நிர்வாகிகள் சந்திப்பில் உயிரிழந்த சூரஜின் குடும்பத்திற்கு ஆறுதல் அளிக்க தவெக நிர்வாகிகள் சென்றபோது, அங்கிருந்த செய்தியாளர்களுக்கும் தவெகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Published on
Summary

தவெகவின் கூட்டத்தில் சுராஜ் என்பவர் வெயில் தாக்கத்தால் உயிரிழந்தார். இதனால், மருத்துவமனையில் ஆறுதல் கூற வந்த நிர்வாகிகள் ஊடகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கைகலப்பில் தவெகவைச் சார்ந்த இந்திர ராஜ் என்பவர் காயமடைந்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெகவின் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம், சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தவெக நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்க வேண்டும், வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், உடல்நலம் சார்ந்த பிரச்னைகள் உள்ளவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க கூடாது என காவல்துறை பல்வேறு கட்டுப்பாடு விதிமுறைகளை விதித்திருந்தது. இந்த நிலையில் தான், தவெக தலைவர் விஜய் பங்கேற்ற இந்தக்கூட்டம் இன்று மதியம் 12.30 மணியளவில் தொடங்கியது.

தவெகவினர் மற்றும் செய்தியாளர்களிடயே மோதல்
தவெகவினர் மற்றும் செய்தியாளர்களிடயே கைகலப்புPt web

அதேசமயம், கூட்டம் நடைபெறும் இடத்தில் கடுமையான வெயில் தாக்கம் இருந்ததாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், இந்த கூட்டத்தில் பங்கேற்றபோது மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சூரஜ் என்பவர் வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம், தவெகவினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த சூழலில் தான், இவரது உடல் உடற்கூறாய்விற்காக தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், சூரஜ் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல தவெக நிர்வாகிகள் பலர் தனியார் மருத்துவமனக்கு வந்தனர். தொடர்ந்து, தவெக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் மருத்துவமனைக்கு வந்தபோது, செய்தியாளர்கள் அவரிடம் பேட்டி எடுக்க முற்பட்டனர். அப்போது, முழுமையான விவரம் அறிந்த பின்னர் விளக்கம் அளிப்பதாக பார்த்திபன் தெரிவித்துப் புறப்பட்டுச் செல்ல முயன்றார்.

தவெகவினர் மற்றும் செய்தியாளர்களிடயே மோதல்
"தவெகவினர் கூறுவது உண்மையல்ல.." இறந்தவரின் நண்பர் பரபரப்பு பேட்டி!

ஆனால், அவருக்குப் பின்னால் சென்ற தவெக நிர்வாகி ஒருவர் செய்தியாளர் மீது ஏற்றுவது போல காரை அலட்சியமாக இயக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ஊடகத்தினர் தவெக நிர்வாகிகளின் காரை வழிமறித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 20 நிமிடங்களுக்கு மேலாக வாக்குவாதம் நேரிட்ட நிலையில், திடீரென இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில், தவெகவை சேர்ந்த இந்திர ராஜ் என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

தொடர்ந்து, இரு தரப்பினரிடையே மோதல் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சமரசம் செய்தனர். மேலும், சம்பவம் குறித்து அளிக்கப்படும் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். தவெக வினர் அளித்த புகாரைத் தொடர்ந்து சமூக ஊடகத்தைச் சார்ந்த ஒருவரை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

தவெகவினர் மற்றும் செய்தியாளர்களிடயே மோதல்
சேலம்| விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு.. மரணித்தவர் விவரம் வெளியீடு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com