\
TVK MLA V.S. Babu Dies After Illness
V.S. BabuPt web

காலமானார் வி.எஸ். பாபு!! அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 72 நாட்களாக மருத்துவனையில் சிகிச்சைப் பெற்று வந்த தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு இன்று (நவம்பர் 19) காலமானார்.
Published on: 

கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு மூச்சுத்திணறல் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 9-ம் தேதி சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவனமையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, 72 நாட்களாக தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார். இந்தச்சூழலில் தான், அவரது உடல் தேறிவந்ததாக செப்டம்பர் 22-ம் தேதி வரை மருத்துவமனையின் அறிக்கைகள் வெளியாகி வந்தன. ஆனால், அதன் பிறகு எந்த அறிக்கையும் வெளியாகவில்லை. இந்தச்சூழலில் தான், தற்போது வி.எஸ்.பாபு மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதையடுத்து, அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் விஜயின் இரங்கல் பதிவில், கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன். அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த திரு.வி.எஸ்.பாபு அவர்களின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் எனத் தெரிவித்துளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்களின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த நிலையில், திடீரென வெளியாகி உள்ள அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஎஸ் பாபுவின் மறைவையொட்டி அவர் மருத்துவமனைக்கு வந்திருந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடினமான காலகட்டங்களில் கூட அவர் எப்போதும் சிரித்த முகத்துடனேயே இருப்பார்; மக்கள் விரும்பக்கூடிய ஒரு தலைவராக அவர் இருந்தார்; அவரது இழப்பு குடும்ப இழப்பு அல்ல.. ஒரு கட்சியின் இழப்பு அல்ல; ஒட்டுமொத்த வடசென்னை மக்களுக்கு முக்கிய இழப்பு எனத் தெரிவித்துள்ளார்.

வீ த லீடர்ஸ் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட பதிவில், கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தவெக கட்சித் தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.