டிஜிட்டல் யுகத்தில் தவெக அமைச்சர்கள்.. கோப்புகள் நகருமா? ரீல்ஸ் தொடருமா?
முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ள நிலையில், அமைச்சர்களின் இலாகாக்களைவிட அவர்களின் சமூக வலைதள செயல்பாடுகள்தான் அதிக கவனம் ஈர்த்துள்ளன. அமைச்சர்கள் கீர்த்தனா, பிரபு, பர்வேஸ், ரமேஷ், பார்த்திபன் ஆகியோர் முதல் நிதி அமைச்சர் மரிய வில்சன் வரை ஒருகாலத்தில் 'ரீல்ஸ்' ஸ்டார்களாக வலம்வந்தவர்கள். தற்போது இவர்கள் பல்வேறு துறைகளுக்கு அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.
எம்எல்ஏக்களாக வெற்றி பெற்றது முதல், தங்களின் தொகுதி பணிகளையும் வீடியோ ஷூட் செய்து விதவிதமான ரீல்களாக சமூக வலைதளங்களை திணறடித்து வருகின்றனர். அமைச்சர் பணியும் ரீல்ஸும் இரு கண்களாகச் செயல்படும் இவர்களைப் பார்த்து, இது மக்கள் பணியா அல்லது போட்டோ ஷூட்டா என எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மில்லியன் கணக்கில் லைக்குகளையும் பார்வைகளையும் அள்ளும் தவெக அமைச்சர்கள், எடிட்டிங் டேபிளை விட்டுவிட்டு, கோப்புகளை நகர்த்த களத்தில் இறங்குவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதேநேரம், அரசியலில் இது புதிது என்றாலும், இளம் தலைமுறையின் டிஜிட்டல் அரசியலுக்கு இதுதான் சரியான வியூகம் எனவும் சொல்லப்படுகிறது.

