”நீட் மட்டும்தான் உலகமா?” - மாணவர்கள் விருது விழாவில் தவெக தலைவர் விஜய் பேச்சு!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நேரில் அழைத்து பாராட்டி, பரிசளித்து வருகிறார். அந்த வகையில், 2025-ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதன் முதல்கட்ட பரிசளிப்பு விழா மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய விஜய், “படிப்புல சாதிக்கணும்தான். அதுக்குக்காக ஒரே ஒரு படிப்புல மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்து படிச்சு அதுல சாதிக்கணும்னு என்கிற அழுத்தத்த ஏத்திக்க தேவை இல்லை. நீட் மட்டும்தான் உலகமா? நீட்டை தாண்டியும் உலகம் இருக்கு. அது ரொம்ப பெருசு. அதுல நீங்க சாதிக்க நிறைய விஷயங்கள் இருக்கு. உங்க குழந்தைங்க மேல எந்த அழுத்தத்தையும் போடாதீங்க. அவங்களுக்கு என்ன பிடிக்குதுன்னு தெரிஞ்சு வழிநடத்துங்க. சாதி மதத்தை வைத்து பிரிவினையை வளர்க்கிற சிந்தனை பக்கம் போயிடாதீங்க. விவசாயிகள் என்ன சாதி மதம் பார்த்தா விதைக்கிறாங்க? இயற்கையோட வெயில் மழைல சாதி இருக்கா? போதைப் பொருள்களை ஒதுக்கி வைக்கிற மாதிரி சாதியையும் மதத்தையும் ஒதுக்கி வச்சிருங்க. அதுதான் எல்லாருக்குமே நல்லது. தந்தை பெரியார் அவர்களுக்கே சாதி சாயம் பூச முயற்சிக்கிறாங்க. ஒன்றிய சிவில் சர்வீஸ் தேர்விலேயே சாதி ரீதியா ஒரு கேள்வியை கேட்டு வச்சிருக்காங்க. அதையெல்லாம் வன்மையாக கண்டிக்கிறேன். இந்த உலகத்துல எது சரி எது தவறுன்னு அலசி ஆரய்ந்தாலே நல்லா வாழலாம். அதேபோல, வீட்டில் உள்ள பெற்றோரை முறையாக ஜனநாயக கடமை செய்ய சொல்லுங்க. ஜனநாயக கடமை என்பது ஊழல் செய்யாதவர்களை தேர்தலில் தேர்வு செய்வதுதான். அடுத்த வருசம் வண்டி வண்டியா பணத்தை கொண்டு வந்து கொட்ட போறாங்க. அது எல்லாமே உங்கக்கிட்ட இருந்து கொள்ளையடிச்ச பணம் அது. என்ன பண்ணணும்னு உங்களுக்கு சரியா தெரியும்” என்றார்.