
கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் முதல் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஈரோடு பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் டோல்கேட் அருகே உள்ள சரளை கிராமத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ள சுமார் 25ஆயிரம் பேர் வரக்கூடும் என்பதால், 16 ஏக்கர் பரப்பளவில் கூட்டத்திடல் அமைக்கப்பட்டுள்ளது. 80 ஏக்கரில் இரு சக்கர வாகன நிறுத்துமிடம் தயார் செய்யப்பட்டுள்ளது. காலை 11 மணியளவில் தொடங்கி பிற்பகல் ஒரு மணி வரை மட்டுமே கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இதில் பங்கேற்பவர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை, மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பல அடுக்குகள் அமைக்கப்பட்டு, கூட்டத்தில் பங்கேற்பவர்களை அமரவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் நடத்தும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அக்கட்சி தொண்டர்கள் வருகை தர தொடங்கியுள்ளனர். கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டமாக இது கருதப்படுவதால், அதனை காண பல்வேறு பகுதிகளில் இருந்து தவெகவினர் கூட்டம் கூட்டமாக வருகை புரிந்துள்ளனர். விஜயின் பரப்புரை வாகனமும் கூட்டத்திடல் வந்துள்ள நிலையில், தவெகவினர் அதனை காண ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனிடையே விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக சுமார் ஆயிரத்து 800 காவலர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர தவெக தரப்பில் ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.
ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு இதுவரை இல்லாத அளவிற்கு பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். விஜய் கலந்துகொள்ளும் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தவெக மூத்த நிர்வாகிகள் நேரில் ஆய்வு செய்து, ஆலோசனையில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரோடு மக்கள் சந்திப்பு கூட்டம் மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் எனக் கூறினார்.
கூட்டம் அதிக அளவில் கூடுவதை தவிர்க்க எடுக்கப்படும் நடவடிக்கையாக அவிநாசி சாலை விமான நிலைய சந்திப்பில் இருந்தே இளைஞர்கள், கல்லூரி மாணவர்களை விமான நிலையத்திற்குள் செல்ல காவல்துறையினர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். ஒவ்வொருவரையும் எங்கே செல்கிறீர்கள் என விசாரித்த பின்னரே விமான நிலைய சாலையில் அனுமதிக்கிறார்கள்
பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 50 படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதற்கேற்ப மருத்துவர்கள் செவிலியர் முன்னேற்பாடுகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
தமிழக வெற்றிக்கழகத்தின் மக்கள் சந்திப்பு பிரசாரக்கூட்டம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடிஅருகே உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது. கரூர் சம்பவத்துக்கு பின் நடைபெறும் பரப்பரை கூட்டம் என்பதால் ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி, நாமக்கல் சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் வந்தபடி உள்ளனர்.
பிரசார கூட்டத்துக்கு வரும் தொண்டர்கள், பொதுமக்களுக்கு ஏதேனும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டால் சிகிக்சை அளிக்க கூட்டம் நடக்கும் மைதான முகாமில் 58 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக்குழுவினர், 4 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயாராக உள்ளன.
மேலும் பிரசார கூட்டத்துக்கு அருகாமையில் உள்ள பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கல்லூரியில் அவசர கால சிகிச்சை அளிப்பதற்காக 50 படுக்கைகள். அதற்கேற்ப மருத்துவர்கள், செலிவியர்கள், எஸ்க்ரே, சிடி ஸ்கேன், எம்ஆர் ஐ போன்ற பரிசோதனைகள் செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து ரத்த வகை பிரிவுகளும் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் துயர சம்பவத்துக்கு பின் நடைபெறும் தவெக பிரச்சார கூட்டம் என்பதால் போதுமான அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகள் முன்னேற்பாடாக செய்யப்பட்டுள்ளன.
ஈரோட்டில் தவெக பரப்புரைக் கூட்டம் நடைபெறும் நிலையில், அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ராஜ்மோகன் புதிய தலைமுறையிடம் பேசினார். அவர் கூறுகையில், “தயவுசெய்து தலைமை காட்டிய வழிகாட்டி நெறிமுறையை கடைபிடியுங்கள். பெண்கள், குழந்தைகள், வயது முதியோர், உடல்சவால் மிக்கவர்கள் தயவுசெய்து பரப்புரை கூட்டத்திற்கு வருவதை தவிர்க்கவும். விஜயமங்கலம் அண்ணன் விஜயின் வெற்றி மங்கலமாக மாறியுள்ளது. தந்தை பெரியார் மண்ணில் எங்கள் தமயன் வருகிறார்.” எனத் தெரிவித்தார்.
கரூர் சம்பவத்திற்கு பிறகு கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கழித்து தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் திறந்தவெளி பொதுக்கூட்டத்தில் ஈடுபடுகிறார். இப்பொதுக்கூட்டம் ஈரோட்டில் இன்று,11 முதல் 1 மணிக்குள் நடைபெறவுள்ள நிலையில், அதில் பங்கேற்க தவெக தலைவர் விஜய் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது, அங்கு கூடியிருந்த தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஈரோடு பரப்புரையில் பங்கேற்பதற்காக தனிவிமானம் மூலம் சென்னையிலிருந்து கோவை விமான நிலையம் வந்தடைந்த தவெக தலைவர் விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக ஈரோடு நோக்கி சென்று கொண்டிருக்கிறார். மேலும், இந்த முறை பரப்புரை வாகனத்தில் செல்லாமல், காரிலேயே பரப்புரை நடக்கும் இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறார்.
கோவை விமான நிலையத்தில் இருந்து ஈரோடு நோக்கி சாலை மார்க்கமாக தவெக தலைவர் விஜய் சென்று கொண்டிருக்கும் நிலையில், காவல்துறையின் கட்டுப்பாட்டையும் மீறி தொண்டர்கள் சிலர் அவரது வாகனத்தை பின்தொடர்ந்து வருகின்றனர்.
தவெக தலைவர் விஜய் கோவை விமான நிலையத்தில் இருந்து கிளம்பி சாலை மார்க்கமாக ஈரோடு நோக்கி சென்று கொண்டிருக்க்கிறார். இந்த நிலையில், பெருமாநல்லூர் புறவழிச்சாலையில் காவல்துறையின் கட்டுப்பாடுகளையும் மீறி தவெக தொண்டர்கள் தவெக தலைவர் விஜய் வாகனத்தை சூழ்ந்து கொண்டு ஆரவாரத்தில் ஈடுபட்டதால் விஜயின் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் தவெக பரப்புரைக் கூட்டம் நடைபெறும் நிலையில், அக்கட்சியின் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் புதிய தலைமுறையிடம் பேசினார். அவர் கூறுகையில், ”தந்தை பெரியார் பிறந்த மண்ணில் தவெக தலைவர் விஜய் விஜயம் செய்திருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. 1972 லிருந்து 2025 முதல் 9 முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய செங்கோட்டையன் பொறுப்பில் இந்தக் கூட்டம் நடைபெற்று வருகிறது. திமுகவிற்கு அறைகூவல் விடுகின்ற சக்தியாக தவெக இன்று இருக்கிறது. திமுகவிற்கும் தவெகவிற்கும் போட்டியென்ற நிலை மாறி இன்று தவெகவிற்கும் திமுகவிற்கும் போட்டி என்று தமிழக அரசியல் களம் மாறியிருக்கிறது எனத் தெரிவித்தார்.
விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் காவல் பணியில் ஈடுபட்ட உதவி ஆய்வாளருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டதால் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெருந்துறையில் நடைபெற்று வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய் மக்கள் சந்திப்பு கூட்ட நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணிக்காக 1500 போலீசார் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை முதல் போலீசார் மக்கள் சந்திப்பு நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஈரோடு காவல் கட்டுப்பாட்டு அறை உதவி ஆய்வாளர் முத்துசாமி இன்று அதிகாலை முதல் பெருந்துறை விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெறும் இடத்தில் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் கூட்ட நெரிசல் காரணமாக சற்று முன் அவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டதால் மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொங்கு மண்டல அமைப்புச் செயலாளரும், தவெக நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன் பேசுகையில், "ஆட்சிக்கு வரவேண்டுமென்று பலபேர் கனவு காண்கிறார்கள் என்று பலரும் சொல்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டு மக்களைப் பொறுத்தவரை நாளை தமிழ்நாட்டை ஆளப்போவது புரட்சித்தளபதிதான். ஏழை எளிய மக்களின் கண்ணீர் தீர்க்கப்பட நல்ல தலைமை வேண்டுமென்ற பல நாள் மக்கள் கனவு இன்று நிறைவேறியிருக்கிறது. நம்முடைய கூட்டம் எதிர்கால தமிழகத்தை வடிவமைக்க பெருந்திரளாக திரண்டிருக்கின்றனர். உங்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வருவாய். அதை தேவையில்லை என்று விட்டு மக்களுக்காக பணியாற்ற வந்திருக்கிறார். இது தீர்ப்பளிக்கப்போகிற கூட்டம். நீங்கள் திரண்டு வந்தால் நாடு தாங்காது. எதிர்காலம் பிரகாசமுடையதாக மாறப்போகிறது" என்றார்.
இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் பேசுகையில், "200 300 ஆண்டுகளாக செழிப்பாக இருந்து இந்தியா முழுவதும் எடுத்துக்காட்டாக கொங்கு பகுதி மக்கள் இருக்கிறார்கள். செம்மொழி மாநாட்டின் மூலம் உங்களிடம் எவ்வளவு வசூல் செய்தார்கள். அன்று திமுகவினர் தூக்கிபோடப்பட்டனர். கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆனது. கொங்குப் பகுதி மக்கள் மொத்தமாக திமுகவை எறிந்தது செம்மொழி மாநாட்டுக்குப் பிறகுதான். கொங்கு பகுதி அமைச்சர்களுக்கு கொடுக்கப்பட்ட துறை டாஸ்மாக். தொழில்துறையில் சிறந்து விளங்கும் கொங்கு பகுதி மக்களின் பிரதிநிதிகளுக்கு ஏன் தொழில்துறை அமைச்சகத்தைக் கொடுக்கவில்லை. ஆட்சியாளர்கள் உங்களுக்கு எவ்விதமான உதவிகளையும் செய்யவில்லை. ஆனால்,2026க்கு பிறகு உங்களுக்கு உதவ தவெக ஆட்சி வரும். மக்களுக்கு தேவையானதை உணர்ந்து அதற்கு ஏற்றார்போல் கொங்கு பகுதி பிரதிநிகளுக்கு அமைச்சரவை ஒதுக்கப்படும். ஈரோடு முத்துசாமி முதல் கரூர் செந்தில்பாலாஜி வரை யாரும் வெற்றி பெறப்போவதில்லை. 2026ல் கொங்கு பகுதி முழுவதும் தவெக கொடிதான் பறக்க வேண்டும்" என்றார்.
கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் கூறுகையில், "காவிரி ஆறு போல் அனைவருக்கும் நல்லது மட்டுமே செய்யும் தலைவர் விஜய். அவர் அனைத்து மதத்திற்கும் பொதுவானவர். தவெக தலைவர் விஜய் அரசியலுக்கு வந்ததன் நோக்கம் தனக்கு புகழ், பணம் கொடுத்த தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்பதுதான். அந்த நம்பிக்கை எனக்கு இருந்ததால்தான் நான் எனது பணியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தேன். நம்மைப் பார்த்து ரசிகர் கூட்டம் என்கிறார்கள். செங்கோட்டையன் தீவிர எம்ஜிஆர் ரசிகர். ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் மதிக்கப்படக்கூடிய நபராக இருக்கிறார். அதுபோல் இந்தக் கூட்டத்தில் இருந்தும் எத்தனை செங்கோட்டையன் வருகிறார் என்று பாருங்கள். ரசிகர் கூட்டமாகக் கூட இருந்துவிடலாம். ஆனால் திமுக மாதிரி கொள்ளையடிக்கும் கூட்டமாக இருக்கக்கூடாது.
நீதிக்கட்சி தொடங்கப்பட்டதன் நோக்கம் 3% மட்டுமே இருந்த குறிப்பிட்ட சமூகத்தினர் அரசாங்கத்தின் பதவிகளை முக்கால்வாசி ஆக்கிரமிப்பு செய்திருந்தார்கள். நீதிக்கட்சி ஆட்சியைக் கொடுக்கிறோம் என்று கூறும் திமுக ஒரு குடும்பத்திற்காக மட்டுமே ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். திமுக குடும்பத்திற்கு சமூக நீதியைப் பேச எந்த தகுதியும் இல்லை. தவறு செய்தால் சர்வாதிகாரியாக மாறிவிடுவேன் என்று முதலமைச்சர் சொல்கிறார். நமது முதலமைச்சருக்கு சர்வாதிகாரம், ஜனநாயகம் என்றால் என்ன என்று தெரியவில்லை. சர்வாதிகார ஆட்சியில் கேள்விகளைக் கேட்டால் அவர்களை தூக்கி உள்ளே வைப்பார்கள். சி எம் சார் நீங்கள் சர்வாதிகாரியாகத்தான் இருக்கிறீர்கள். ஜனநாயகவாதியாக மாற முயற்சி செய்யுங்கள்.
தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் பேசுகையில், “பெரியார் மண்ணில் விஜய் வந்திருக்கிறார், இனி ஈரோடு தளபதியின் கோட்டை.. இது வெறும் கூட்டம் அல்ல. மாபெரும் மாற்றத்திற்கான தொடக்கம். தளபதியின் வெற்ற்றிக்காக ஒன்றிணைவோம்” என்றார்,
தவெக தலைவர் விஜய் பேசுகையில், “பொதுவாக நல்ல காரியங்கள் ஆரம்பிக்கும்முன் மஞ்சளைக் கொண்டுதான் ஆரம்பிப்பார்கள். நம் வீட்டில் கூட நம் குடும்பப் பெண்கள் நமக்காக மஞ்சள் புடவை கட்டிக்கொண்டுதான் வேண்டிக்கொள்வார்கள். நம் கொடியிலும் மஞ்சள் இருக்கிறது. அப்படி மஞ்சள் விளையும் பூமிதான் ஈரோடு. இங்கு வந்து மஞ்சளை பற்றி பேசாமல் வேறு எங்கு பேசுவது. ஈரோடு விவசாயத்திற்கு பெயர்போன மண். விவசாயத்திற்கு கவசமாக இருப்பது காளிங்கராயன் அணை. காளிங்கராயன் கால்வாய். அந்தப் பணிகளில் அவர் ஈடுபட்டுக்கொண்டு இருந்தபோது அவர் சோர்வடைந்தாராம். அப்போது அவரது தாய், மகனே காளிங்கா தயிர் விற்ற காசு தாழ்வாரம் வரை இருக்கிறது. மோர் விற்ற காசு இருக்கிறது. அதை எடுத்துக்கொண்டு சென்று கால்வாய் வெட்டு என்றாராம். பெற்ற தாய் கொடுக்கும் தைரியத்திற்கு இணையாக வேறு எதுவும் இல்லை. அதை வைத்துக்கொண்டு எதையும் சாதிக்க முடியும். அப்படி ஒரு தைரியம் தான் நீங்கள் கொடுக்கிறீர்கள்.
“நான் சினிமாவுக்கு வந்தபோது எனக்கு வயது 10. அப்போது இருந்தே எனக்கும் மக்களுக்கான உறவு தொடர்கிறது”- தவெக தலைவர் விஜய்#TVK | #Vijay | #Erode pic.twitter.com/nCoIMC0MgP
— PttvOnlinenews (@PttvNewsX) December 18, 2025
இதை எப்படி கெடுக்கலாம்,. எப்படி பிரிக்கலாம்.. விஜய் மேல் சூழ்ச்சிகளை செய்து எப்படி மக்களை நம்பவைக்கலாம் என சிலர் நினைக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியவில்லை. இது இன்று நேற்று வந்த உறவில்லை. இது கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் மேலான உறவு. அதனால் நீங்கள் என்ன செய்தாலும் இந்த விஜயை மக்கள் ஒருநாளும் கைவிட மாட்டார்கள்.
காளிங்கராயன் அணை கட்டுவதற்காக பவானி சென்று பார்க்கும்போது ஒரு பாம்பு அங்கு உட்கார்ந்ததாம். அந்த இடத்தில்தான் அணை கட்ட ஆரம்பித்தாராம். அந்த பாம்பு சென்ற இடத்தில்தான் கால்வாய் வெட்டினாராம். சில வாய்மொழிக் கதைகள் சொல்கிறார்கள். தண்ணீர் சேர்த்து வைத்து குடிப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் வழிவகுப்பது என்பது எவ்வளவு நல்ல விசயம். இவற்றையெல்லாம் செய்துவிட்டு கதை சொன்னால் பரவாயில்லை. ஆனால், எதையும் செய்யாமல் கதை மட்டும் சொல்கிறார்கள். அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை விரிவுபடுத்தினால் அந்த மாவட்டங்களில் இருக்கும் மக்களுக்கும் விவசாயத்திற்கும் எவ்வளவு உதவிகரமாக இருக்கும். வள்ளுவர் கோட்டத்தில் காட்டிய அக்கறையை மக்களின் வாழ்வாதாரத்திலும் காட்டலாமே. ஏன் காட்ட மாட்டேன் என்கிறீர்கள். அரசாங்கம் நடத்துகிறீர்களா கண்காட்சி நடத்துகிறீர்களா?
நான் எத்தனை நிமிஷம் பேசுனா உங்களுக்கு என்ன சார்? - தவெக தலைவர் விஜய் #TVK | #Vijay | #TVKVijay | #Erode pic.twitter.com/HuP1cyibAr
— PttvOnlinenews (@PttvNewsX) December 18, 2025
ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் திருப்பிப்போட்ட சீர்திருத்த நெம்புகோல் பெரியார். அரசியல் சட்டத்திருத்தை மேற்கொள்ள போராட்டம் நடத்தியவர். நம் கொள்கை தலைவர் தந்தை பெரியார். அப்போது அண்ணாவும் எம்ஜிஆரும் யார். பெரியாரிடம் இருந்து கொள்கைகளை எடுத்துக்கொண்டோம். பெரியாரை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட அண்ணா எம்ஜிஆரிடம் இருந்து தேர்தல் அணுகுமுறைகளை எடுத்துக்கொண்டோம். அண்ணாவும் எம் ஜி ஆரும் தமிழ்நாட்டின் சொத்து. அவர்களை யாரும் எடுக்கக்கூடாது என்றெல்லாம் சொல்லக்கூடாது. உங்களுக்குதான் தவெக ஒரு பொருட்டே இல்லை என்று சொல்லிக்கொண்டு ஏன் புலம்புகிறீர்கள்.
பெரியாரின் பெயரையும் அவரது கொள்கையையும் பின் தொடருவதாக சொல்லிக்கொண்டு கொள்ளை அடிக்கின்றனர். தயவு செய்து பெரியாரின் பெயரைப் பயன்படுத்தி கொள்ளை அடிக்காதீர்கள். பெரியாரின் பெயரை சொல்லி கொள்ளை அடிப்பவர்கள்தான் நம் அரசியல் எதிரி. எதிரிகள் யாரென்று சொல்லிவிட்டு களத்திற்கு வந்திருக்கிறோம். அதனால் அவர்களை மட்டும்தான் எதிர்ப்போம். 2026 தேர்தலில் களத்தில் இருப்பவர்களை மட்டும்தான் எதிர்க்க முடியும். சம்பந்தமில்லாதவர்களை எல்லாம் எதிர்க்க முடியாது.
எத்தனை வாக்குறுதிகள் கொடுத்தார்கள். சொன்னார்களே செய்தார்களா? மஞ்சள் விவசாயத்திற்கு எதுவும் செய்யவில்லை. கரும்பு நெல்லுக்கு அரசு விலை நிர்ணயிக்கிறது. ஆனால், அதிலும் ஊழல். கொள்முதல் ஒழுங்காக நடப்பதில்லை. தவெகவை எப்படியெல்லாம் முடக்கலாம் என்றுதான் யோசிக்கிறார்கள்.
விஜய் அரசியல் பேசவில்லை என்கிறார்கள். 10 நிமிடம்தான் பேசுகிறார் என்கிறார்கள்., நான் எத்தனை நிமிடம் பேசினால் உங்களுக்கு என்ன? ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களை சந்தித்து அவர்களது பிரச்னைகளை பேசுவது அரசியல் இல்லாமல் வேறு என்ன?
நான் சலுகைகளுக்கு எதிரானவன் இல்லை. மக்களுக்கான சலுகைகளை இலவசங்கள் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. மக்கள் காசில் மக்களுக்கு செய்வதை எப்படி இலவசம் என்பீர்கள்,. ஓசியில் போகிறீர்கள் என்று சொல்லி அசிங்கப்படுத்துகிறீர்கள். மக்களுக்கு ஒன்று என்றால் விஜய் வந்து நிற்பான்.
#BREAKING | திமுக ஒரு தீயசக்தி...- விஜய்#TVK | #Vijay | #Erode | #DMK pic.twitter.com/6QZn3vPORL
— PttvOnlinenews (@PttvNewsX) December 18, 2025
மக்களுக்கான வாழ்வாதரம் உயருவதற்கான திட்டங்களை அரசாங்கம் செய்துகொடுக்க வேண்டும். அப்படிப்பட்ட அரசாங்கம்தான் நல்ல அரசாங்கம். இதைத்தான் அன்று சொன்னோம். எப்படி செயல்படுத்துவீர்கள் என்று கேட்கிறார்கள், வாயிலேயே வடை சுடுவதற்கு நாங்கள் என்ன திமுகவா? எல்லோருக்கும் வீடு கட்டிக்கொடுப்போம் என்றோம். எங்கள் ஆட்சியிலேயே கொடுத்துவிட்டோம் என்கின்றனர். இந்த ஊரில் வாடகைக்கு இருப்பவர்களே இல்லையா? எல்லோரும் டிகிரி படிக்க வேண்டுமென்று சொன்னோம். நாங்களே படிக்கவைத்து விட்டோம் என்கின்றனர். அது உண்மையானால் பள்ளி அளவில் அதிக மாணவர்கள் இடைநிற்பது யாருடைய ஆட்சிக்காலத்தில். காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தீர்களே? எத்தனை பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. இந்த விஷயங்களை எல்லாம் மக்களிடம் எடுத்து சொன்னால், அவதூறு பரப்புகிறார்கள். எம்ஜி ஆரும் ஜெயலலிதாவும் ஒரே வார்த்தையை சொல்லி திமுகவை காலி செய்தார்கள், அதை நானும் சொல்கிறேன், திமுக ஒரு தீயசக்தி.
செங்கோட்டையன் சேர்ந்ததுபோல் பலரும் வந்து சேர இருக்கிறார்கள். அவர்களுக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்படும்" என்றார்.
ஈரோடு சரளையில் நடைபெற்ற தவெக கூட்டத்தினை முடித்து கொண்டு விஜய் காரில் புறப்பட்டார். அப்போது தொண்டர்கள் காரை செல்ல விடாமல் வழிமறித்து செல்பி எடுத்தபோது சிலர் கார் முன்பக்கதில் விழுந்ததால் பரப்பரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து கார்முன் விழுந்தவர்களை பவுன்சர்கள் அப்புறபடுத்தினர்.
தமிழக வெற்றி கழகத்தின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகேயுள்ள சரளையில் நடைபெற்றது. தவெக கூட்டத்தில் விஜய்யின் பேச்சை கேட்பதற்கும் அவரை காணவும் மக்கள் சாரை சாரையாக ஆயிரக்கணக்கானோர் திடலுக்கு வருகை புரிந்து காத்திருக்கின்றனர்.
திருப்பூர் கோயம்புத்தூர், ஒசூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் வருகை புரிந்த நிலையில் விஜய் கூட்டத்தில் பேசி முடித்தவுடன் காரில் ஏறி புறப்பட்டு விமானம் மூலம் சென்னை செல்ல முற்பட்டார். அப்போது விஜயமங்கலம் சுங்கச்சாவடியை விஜய் கடந்த போது தவெக தொண்டர்கள் சுங்கச்சாவடியை சூழ்ந்து கொண்டு விஜய்யின் காரை செல்லவிடாமல் அவர் கார் முன் மறித்து நின்று செல்பி மற்றும் வீடியோ எடுத்து கொண்டனர். விஜய்யின் கார் முன்பாக சிலர் வீடியோ எடுக்க முற்பட்டபோது கார் முன்பாக விழுந்ததை அடுத்து அவருடன் சென்ற பவுன்சர்கள் பொதுமக்களை அப்புறப்படுத்தினர். பின் சாலை வழியாக கோயம்புத்தூர் செல்ல ஆரம்பித்தார்.
Thank you Erode 🙏🏻 pic.twitter.com/897ADrZtA4
— Vijay (@actorvijay) December 18, 2025