தவெக பொதுக்குழு கூட்டத்தில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!
தவெக பொதுக்குழு இன்று நடைபெறும் நிலையில், கட்சியின் பொதுச்செயலாளருக்கு வருங்கால முதல்வர் என்று போஸ்டர் ஒட்டப்பட்ட சம்பவம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இன்று நடைபெறுகிறது. இதில் 137 செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் 1,500க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்காக தடபுலான விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. காலையில் 500 பேருக்கும், மதியம் 2500 பேருக்குமாக உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்றைய கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் என்ன பேசப் போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது. தற்போதைய அரசியல் சூழலை முன்வைத்து விஜய்யின் உரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், நகரின் பல இடங்களில் விஜயின் வரவேற்பை ஒட்டி, போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்தவகையில், வெற்றித் தலைவரே என்றும், வருங்கால முதல்வரே என்று கட்சி நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இப்படி ஒட்டப்பட்ட போஸ்டரில்தான், பொதுக்குழு கூட்டத்திற்காக சென்னை இசிஆர் சாலைகளில் அடிக்கப்பட்டிருந்த போஸ்டர்களில் வருங்கால முதலமைச்சர் என பொதுச்செயலாளர் ஆனந்த் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் சரவணன் பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
பொதுசெயலாளரை வருங்கால முதல்வர் என குறிப்பிட்டிருப்பதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பொதுக்குழுவுக்கு வந்துள்ள இசிஆர் சரவணன் போஸ்டர் விவகாரம் தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.
’அந்த போஸ்டருக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. சிலர் வேண்டுமென்றே இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். வேறு கட்சியை சார்ந்தவர்கள் யாராவது இதை செய்து இருக்கலாம் . 30 ஆண்டுகளாக நான் விஜய் மக்கள் இயக்கம் மற்றும் தற்போது கட்சியில் இருந்து வருகிறேன். இதுபோன்று ஒரு செயலில் நான் ஈடுபடவில்லை. முதுகில் குத்தும் வகையில் இப்படி செய்திருக்கிறார்கள்.’ என்று கூறியுள்ளார்.
மேலும், இதற்கு விளக்கமளித்திருக்கும், தவெக பொது செயலாளர் ஆனந்த், “ தமிழக வெற்றிக் கழகத்தில் நான் சாதாரண தொண்டன்; யாரோ சில விஷமிகள் இதுபோன்ற போஸ்டரை ஒட்டியுள்ளனர்” என்று பதிலளித்துள்ளார்.
இதனால், அப்பகுதியில் சற்று நேரம் குழப்பம் ஏற்பட்டுள்ளது.