"தவெகவுக்கு ஆதரவு இல்லை” - ஐயூஎம்எல் தலைவர் காதர் மொய்தீன் திட்டவட்டம்!
தமிழக சட்டசபைத் தேர்தலில் புதிய வரவான விஜயின் தமிழக வெற்றிக்கழகம் 108 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவாகியுள்ளது. எனினும் ஆட்சி அமைக்க 118 இடங்கள் என்னும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மற்ற கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்தசூழலில் தான், 5 எம்.எல்.ஏ-க்களை வைத்திருக்கும் காங்கிரஸ் தனது ஆதரவினை நேற்று தெரிவித்தது அதனையடுத்து தவெக ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 113ஆக உயர்ந்திருக்கிறது. இதன்மூலம், தவெக தனது பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 6 இடங்களே தேவைப்படும் நிலை உருவாகியிருக்கிறது.
இந்தசூழலில் தான், விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை தொடர்ந்து தவெக கோரி வருகிறது. அதேபோல, திமுக கூட்டணியில் இருக்கும் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி சட்டப்பேரவைத் தேர்தலின் போது 2 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், அந்தக் கட்சியிடமும் தவெக ஆதரவு கோரியிருக்கிறது. அதன்படி, தவெக கொள்கைப் பரப்புச் செயலாளர் அருண்ராஜ் ஐயூஎம்எல் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொய்தீனை இன்று நேரில் சந்தித்து ஆதரவு கோரியிருந்தார். எனினும், தவெகவுக்கு ஐயூஎம்எல் ஆதரவு கொடுக்க மறுத்துவிட்டது.
இந்தசூழலில் தான், தவெகவுக்கு ஆதரவு கொடுக்காதது ஏன் என்பது குறித்து ஐயூஎம்எல் தேசியத் தலைவர் காதர் மொய்தீன் அளித்துள்ள பேட்டியில், திமுக கூட்டணியில் இருப்பதால், தவெகவுக்கு ஆதரவு இல்லை. திமுகவின் முடிவே எங்கள் முடிவு என தெரிவித்துள்ளார். மேலும், தனித்து முடிவெடுக்கும் நிலையில் நாங்கள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மு.க.ஸ்டாலினுடன் நேற்றும், இன்றும், நாளையும் இருப்போம் என ஏற்கெனவே அவர் தெரிவித்திருந்த நிலையில், மீண்டும் தங்கள் நிலைப்பாட்டை உறுதிபட தெரிவித்துள்ளார்.

