”ஒரு சதவீதம் ஓட்டு வாங்க தில், திராணி இருக்கிறதா?” - எதிர்க்கட்சிகளுக்கு சவால்விட்ட விஜய்!
சேலம், சீலநாயக்கன்பட்டி தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், எதிர்க்கட்சிகளுக்கு சவால் விட்டுள்ளார். ”என்னை மாதிரி சொந்தமாக ஒரு கட்சி ஆரம்பித்து 1 சதவீதம் ஓட்டு வாங்கி காட்டும் தில்லு அவர்களுக்கு இருக்கிறதா? திராணி இருக்கிறதா” என அவர் சவால் விட்டுள்ளார்.
சேலம், சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் உள்ள தாளமுத்து நடராஜன் மைதானத்தில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய தவெக தலைவர் விஜய், “ஹே விஜய் வீட்டைவிட்டு வெளிய வா.. பனையூரை விட்டு வெளிய வா என்பவர்களுக்கு என் வீடு எங்கிருக்கிறது என்பது தெரியுமா? இந்த தமிழ்நாடு என்பது மற்றவர்களுக்கு வேண்டுமானால் மாநிலமாக இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை என் தாய்நாடான தமிழ்நாடுதான் என் வீடு. என் வீட்டில் 8 கோடிபேர் இருக்கிறார்கள். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் என் வீட்டு மக்கள். என் குடும்பம் என் உறவு; என் சொந்தம். எனக்கு எல்லாமும் கொடுத்த இந்த சொந்தங்களுக்கு எல்லாமுமாக உடன் இருக்கப்போவது இந்த விஜய் மட்டும்தான். ஓட்டு கேட்டு நான் வரவில்லை நீதி கேட்டு வந்திருக்கிறேன். காசு கொடுத்து ஓட்டு வாங்கிவிடலாம் எனக் கனவு காண்கிறார்கள். வண்டி, வண்டியாக பணத்தை கொண்டுவந்து கொட்டுவார்கள். சந்தோஷமாக வாங்கிக் கொள்ளுங்கள். எல்லாம் உங்கள் பணம். அதனை வாங்கிக்கொண்டு அவர்கள் காதிலேயே விசிலை ஊதி அனுப்புங்கள். நமக்கு எதிராக சதி செய்வது யார், சூழ்ச்சி செய்வது யார், நமக்கு எதிராக பழிபோடுவது யார் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும். உங்களிடம் நீதி கேட்காமல் நான் யாரிடம் கேட்பேன்.
எந்த கட்சியையும் ஒழிப்பதற்கு நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. மற்றவர்களைப் போல் வெறுப்பு அரசியலை செய்வதற்கும் நாங்கள் வரவில்லை. அரசியல் ரீதியாக எங்கள் எதிரிகளை அறிவித்துவிட்டு தேர்தலில் நின்று வெற்றி பெற்று மக்களுக்கு எங்கள் நன்றிக்கடன் செலுத்துவதற்காகத்தான் அரசியலுக்கு வந்திருக்கிறோம். அடுத்தவர்கள் ஆரம்பித்த அரசியல் கட்சியில், அரசியல்வாதிகளாக இருந்துகொண்டு இருப்பவர்களுக்கு ஒரு சவால்.. என்னை மாதிரி சொந்தமாக ஒரு கட்சி ஆரம்பித்து 1 சதவீதம் ஓட்டு வாங்கி காட்டும் தில்லு அவர்களுக்கு இருக்கிறதா? திராணி இருக்கிறதா? 30 வருட மக்கள் இயக்கமாக இருந்து, மிகப்பெரிய அரசியல் கட்சியாக வளர்ந்து, ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை மீறி முதன்மை சக்தியாக வளர்ந்து 30% வாக்குகளை கடந்திருக்கும் நமக்கு அனுபவம் இல்லையா? மக்களை நேசிப்பதற்கு நல்ல குணம் இருந்தால் போதும். சூப்பரான நல்ல ஆட்சி கொடுக்கலாம். ஆட்சிக்கு வரவேண்டுமென்பதற்காக நடைமுறைக்கு சாத்தியமில்லாததை வாக்குறுதிகளாகக் கொடுக்க மாட்டேன். ஆட்சிக்கு வந்தபின்னும் அவர்கள் கொடுக்கவில்லை என்று சொல்லாமல் உங்களுக்காக போராடத் தயாராக இருக்கிறேன். இது தமிழ்நாடு சட்டசபைக்கான தேர்தல்.. மக்கள் விரோத ஆட்சியை நடத்தும் திமுக அரசை அகற்ற வேண்டுமென்றால் நாம் யாரை எதிர்க்க வேண்டும். எதற்கு தேவையில்லாமல் மக்கள் பலமுறை டெலிட் செய்தவர்களிடம் நாம் ஏன் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் விரும்பும் விஜய் வேண்டுமா? மக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஸ்டாலின் சார் வேண்டுமா? அவ்வளவுதான் இந்தத் தேர்தல்.” எனத் தெரிவித்தார்.

