\
Seenivasa Sethupathi & Periya Karuppan
Seenivasa Sethupathi & Periya Karuppanweb

ஒரே ஒரு வாக்கில் வென்ற தவெக வேட்பாளர்.. வழக்கை வாபஸ் பெற்ற பெரியகருப்பன்! பின்னணி என்ன?

ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி, தபால் வாக்கு குழப்பம், நீதிமன்றப் போராட்டம் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்த பெரியகருப்பன்
Published on

செய்தியாளர்; M. மீரா

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றிபெற்ற தமிழக வெற்றிக் கழகம் . காங்கிரஸ், இந்திய முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைத்தது. இந்தத் தேர்தலில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்ட பெரியகருப்பன் 83,364 வாக்குகளைப் பெற்ற நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83,365 வாக்குகளைப் பெற்றார். இதன்படி தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி 1 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

ஒரு வாக்கு வித்தியாசத்தில் எம்.எல்.ஏ பதவியை இழந்த பெரிய கருப்பன் திருப்பத்தூர் தொகுதியில் பதிவான தபால் வாக்கு ஒன்று, வேலூர் அருகே உள்ள திருப்பத்தூர் தொகுதி எண் 50-க்கு தவறுதலாக சென்றுவிட்டது. அந்த வாக்கை சிவகங்கை அருகே உள்ள திருப்பத்தூர் மாவட்டத் தொகுதி 185-இல் சேர்க்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

Seenivasa Sethupathi
Seenivasa Sethupathi web

புகார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காததால் முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு அவசர வழக்காக எடுக்கப்பட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மே 10ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்ட நிலையில், மே 11ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்த போது வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர். பின்னர் மே 12 அன்று அளித்த தீர்ப்பில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தவெக வேட்பாளருக்கு தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தவெக சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதி மனு தாக்கல் செய்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குழு இது மிகவும் மோசமானது என்று கூறி சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. பெரிய கருப்பன் தாக்கல் செய்திருந்த மனு மீதான சென்னை உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளையும் உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்தது.

Periya karuppan
Periya karuppan web

வழக்கை வாபஸ் பெற்ற பெரிய கருப்பன்

சீனிவாச சேதுபதி வெற்றியை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளதை அடுத்து, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், தொகுதி மாறி அனுப்பப்பட்ட தபால் வாக்கை மீட்டு, மறு எண்ணிக்கை கோரி கடந்த மே மாதம் தாக்கல் செய்த வழக்கை திரும்பப் பெற, பெரியகருப்பன் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று, வழக்கை திரும்பப் பெற அனுமதித்து தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Seenivasa Sethupathi & Periya Karuppan
மீண்டும் ஒரு லாக்கப் மரணம்? வெளியான இளைஞரின் வீடியோ.. தலைவர்கள் கண்டனம்!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com