சீனாவில் இருந்து தூத்துக்குடி வந்த கப்பல்: கொரோனா பரிசோதனை நடத்தப்படவில்லை என குற்றச்சாட்டு!
பனாமா நாட்டுக்குச் சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று சீனா, சிங்கப்பூர் வழியே தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்துள்ளதால், கொரோனா பாதிப்பு இருக்குமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் உள்ள மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. இதனால் அண்டை நாடுகளுக்கு இடையே பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக கடந்த 11-ஆம் தேதி இந்திய கப்பல்துறை அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், சீனாவில் தங்கியிருப்பவர்கள் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி இல்லை என தெரிவித்திருந்தது. ஜனவரி 15 அல்லது அதற்கு பிறகு சீனாவில் தங்கியிருந்தவர்கள் நேபாளம், பூடான், பங்களாதேஷ், மியான்மர் எல்லைகள் வழியே ஆகாயம், தரை மற்றும் கடல் வழியாக இந்தியா வர தடைவிதிக்கப்பட்டது.
முன்னதாக கடந்த மாதம் 27-ஆம் தேதி தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகப் பொறுப்புக் கழகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், வெளிநாடுகளில் இருந்து வரும் கப்பல்களின் கேப்டன்கள் தங்கள் பயணிகளின் நிலை குறித்து தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தது. மேலும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி, கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் பனாமா நாட்டுக்குச் சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று சீனா, சிங்கப்பூர் வழியே தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்துள்ளதால், கொரோனா பாதிப்பு இருக்குமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. RU YI I என்ற சரக்கு கப்பல் கடந்த 13ஆம் தேதி தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்தது.
அந்த கப்பல் முன்னதாக சீனாவில் தைபே, ஷாங்காய் நகரங்களுக்குச் சென்று, அதன்பின்னர் சிங்கப்பூர் வழியே தூத்துக்குடி வந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் தேதி கப்பல் சீனாவில் பயணத்தை தொடங்கியிருந்தாலும், அதற்கு பிறகு கடந்த மாதம் 19ஆம் தேதி சீனாவின் ஷாங்காய் நகருக்கும், 28ஆம் தேதி டய்கேங் நகருக்கும் சென்றுவிட்டு, கப்பல் பிப்ரவரி 7ஆம் தேதி சிங்கப்பூர் வந்துள்ளது.
சரக்கு கப்பலில் கேப்டன் உள்பட 22 பணியாளர்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருசிலர் மியான்மர் நாட்டவர் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தூத்துக்குடிக்கு வந்த கப்பலில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சீனாவில் உள்ள பல்வேறு துறைமுகங்களுக்கு சரக்கு கப்பல் சென்று வந்துள்ளதால் வைரஸ் பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளது என்று அச்சம் தெரிவிக்கும் மக்கள், கப்பலில் வந்துள்ளவர்ளுக்கு உரிய மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.