தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டியின்போது மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டி இன்று நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த போட்டியில் சோரிஸ்புரத்தைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி மாரீஸ்வரி பங்கேற்றார். போட்டியின் முதல் சுற்றின் முடிவில் மயக்கமடைந்த அந்த மாணவி, திடீரென மைதானத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அவரின் உடல், பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
உயிரிழந்த மாணவி கடந்த ஒரு வாரமாகத்தான் குத்துச்சண்டை பயிற்சியை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இந்த போட்டியில் கலந்து கொண்டு அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மாணவி பங்கேற்கும் முதல் போட்டி என்பதால் அவருடன் அவரது தாயாரும் வந்துள்ளார். மாணவி மயக்கமடைந்த பின் அவரது தாயாருடன் மருத்துவமனைக்கு ஆட்டோவில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். போட்டி நடைபெறும் மைதானத்தில் முதலுதவி வசதி சரிவர செய்யப்படவில்லை என்றும் மைதானத்தில் ஆம்புலன்ஸ் வசதி இல்லை என்றும் கூறப்படுகிறது.