தூத்துக்குடி: ரயில் நிலையத்தில் ரிவர்ஸ் எடுத்துவந்த பயணிகள் ரயில்... காரணம் என்ன?
செய்தியாளர்: பே.சுடலைமணி செல்வன்
திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலும், திருச்செந்தூரில் இருந்து பாலக்காடுக்கு, பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது. இவற்றில் இன்று காலை 7.50க்கு ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தாதன்குளம் ரயில் நிலையம் வழியாக திருச்செந்தூர் நோக்கி பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது.
அப்போது தாதன்குளத்தில் நின்று செல்ல வேண்டிய இந்த ரயில், அங்கு நிற்காமல் சென்றுள்ளது. இதனால் ரயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட ரயில் ஓட்டுநர் ரயிலை பின்னோக்கி கொண்டு வந்துள்ளார். இதனால் ரயில் மீண்டும் தாதன்குளம் ரயில் மேடைக்கு வந்துள்ளது. இதை அங்கு இருந்த ரயில் பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
ஏற்கனவே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருச்செந்தூரில் இருந்து கிளம்பிய பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் கச்சனாவிளை ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்ற காரணத்தினால் மீண்டும் பின்னோக்கி வந்தது. இந்த காட்சிகள் அடிப்படையில் ரயில் ஓட்டுநர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தற்போது நிற்காமல் சென்ற ரயில் பின்நோக்கி வந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பதால், இப்போதும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.