தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அமெரிக்காவுக்கு சரக்கு அனுப்பலாம்
தூத்துக்குடித் துறைமுகத்தில் இருந்து நேரடியாக அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு சரக்குகளை அனுப்பும் வகையில் அத்துறைமுகம் மேம்படுத்தப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சாகர் மலா திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள 3 பெரிய துறைமுகங்கள் அதிகப்படியான ஏற்றுமதி மற்றும் மதிப்புகூட்டப்பட்ட சேவைகளுக்காக மேம்படுத்தப்பட உள்ளதாக பொன்.ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மின்சார உற்பத்திக்கான நிலக்கரியைக் கடல் மார்க்கமாக கொண்டு செல்வதில் தமிழக துறைமுகங்கள் முன்னிலை வகிக்கின்றன. ஆகவே தூத்துக்குடி துறைமுகம் தற்போது 14 மீ ஆழத்தில் இருந்து 16.5 மீட்டராக ஆழப்படுத்த ரூ. 3,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இங்குள்ள 6 கப்பல்களை கையாளும் தளம் மற்றும் துறைமுக முகப்பினை பலப்படுத்தவும் விரிவுபடுத்தவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுவரை 60,000 டன் எடை கொண்ட கப்பல்கள் கையாண்ட தூத்துக்குடி துறைமுகத்தில் இந்தப் பணிகள் செய்து முடித்த பின்பு 1,30,000 டன் எடை கொண்ட கப்பல்களை இனி கையாள முடியும். இதன் மூலம் சரக்கு போக்குவரத்து செலவு 30% குறையும். தற்போது 630 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட துறைமுகத்தில் மேலும் 300 லட்சம் டன் கொள்ளளவு கையாளும் திறன் அதிகரிக்கப்படுகிறது. இதன் மூலம் துறைமுகத்தின் கையாளும் திறன் 50% அதிகரிக்கும்.
சிறிய பெட்டக துறைமுகத்தில் இருந்து பெரிய பெட்டகங்களை கையாளும் துறைமுகமாக தூத்துக்குடி துறைமுகமாக மாற்றம் செய்யப்படும். தமிழக ஏற்றுமதியாளர்கள் தங்களது சரக்கு பெட்டகத்தை கொழும்பு, மலேசியா துறைமுகங்களுக்கு செல்லாமல் நேடியாக தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அமெரிக்கா, ஐரோப்பாவிற்கு அனுப்ப இந்த மேம்பாட்டுப் பணிகள் வழி செய்யும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.