சலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..!
பொதுவாக சிகை அலங்கரிக்கும் இடங்களில் அரசியல் பேச்சு, சினிமா பாடல்கள் உள்ளிட்டவைகளே அதிகளவில் பேசப்பட்டு விவாதிக்கப்படும். இது எதுவும் இல்லாமல் சுமார் 200-க்கும் மேற்பட்ட புத்தகங்களை கொண்ட நூலகம் அமைத்து சலூனில் வரும் வாடிக்கையாளர்களை வரவேற்கிறார் பொன்.மாரியப்பன்.
(பொன்.மாரியப்பன்)
தூத்துக்குடி மில்லர்புரத்தை சேர்ந்தவர் பொன்.மாரியப்பன். இவரின் தந்தையும் சலூன் தொழில்தான் செய்து வந்துள்ளார். 8-ஆம் வகுப்புக்கு மேல் பள்ளி செல்லாத பொன்.மாரியப்பன், தூத்துக்குடி வழக்கறிஞரிடம் குமாஸ்தாவாக பணிபுரிந்துள்ளார். அப்போது வழக்கறிஞர் படிப்பின் முக்கியத்துவத்தையும் வாசிப்பின் முக்கியத்துவத்தையும் சொல்ல, தான் படிக்க இயலாததை நினைத்து மன வேதனை அடைந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து தங்களது தொழிலாளான முடித்திருத்தம் கடையை அப்பகுதியில் அமைத்துள்ளார் பொன் மாரியப்பன். கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் மாணவர்கள் பெரும்பாலும் வாட்ஸ் அப், தொலைபேசியில் பேசி கொண்டு இருப்பதை கண்டுள்ளார். இதனால் வாடிக்கையாளர்கள் தேவையற்றதில் மூழ்காமல் இருக்க தனது கடையில் இவர் ஒரு நூலகத்தை அமைத்துள்ளார்.
கடையில் அரசியல் வேண்டாம் என்பதை நாசூக்காக வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்கும் பொன்.மாரியப்பன், வாசிப்பின் மூலம் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் அறிமுகத்தை பெற்றுள்ளார். புத்தகங்களே துணை என்ற தலைப்பில் அவர் பேசிய ஒலிப்பதிவை சலூனில் ஒலிபரப்பும் அவர், தொடர்ந்து சுகி சிவம், நெல்லை கண்ணன், தமிழருவி மணியன், பர்வீன் சுல்தானா ஆகியோரின் சொற்பொழிவுகளை தவறாமல் ஒலிப்பரப்பி வருகிறார்.
தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் நூலகம் குறித்தும் என்ன புத்தகம் படித்தீர்கள்..? உபயோகமானதாக இருந்ததா..? என்பதை கையேடு மூலம் பதிவிடவும் செய்கிறார். தனது சலூனில் அரசியல் தலைவர்களின் படத்தை தவிர்த்து திருவள்ளுவர், அப்துல் கலாம், மகாத்மா காந்தி, விவேகானந்தர், மகாகவி பாரதி படங்களை வைத்துள்ளார்.
தற்போது முடி வெட்டும் கட்டணம் ரூ.80 ஆக உயர்ந்த போதிலும் வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக புத்தகங்கள் வாசிக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ 80 கூலிக்கு பதிலாக ரூ.50 மட்டுமே வசூலித்து வருகிறார். இவரது முயற்சியை பாராட்டும் வகையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் வந்து பாராட்டியதோடு மட்டுமல்லாமல் புத்தகங்களை கொடுத்தும் உதவியுள்ளார்.