பெற்றோரின் அலட்சியத்தால் நீர் தொட்டிக்குள் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு
தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் லிங்கேஸ்வரன். இவரது மனைவி நிஷா. இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுக்கு முன் திருமணம் நடைப்பெற்றது. இவர்களது மகள் ரேவதி சஞ்சனா (2 வயது ) தந்தை லிங்கேஷ்வரன், தாய் நிஷாவுடன் இன்று மாலை டிவி பார்த்து கொண்டிருந்தனர். அப்போது தனது குழந்தை வீட்டை விட்டு வெளியேறி சென்றதாக தெரிகிறது. திடீரென்று குழந்தையை காணவில்லை என உணர்ந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடி உள்ளார்.
இந்நிலையில், லிங்கேஸ்வரன் தனது வீட்டின் பாத்ரூமை திறந்து பார்த்தபோது, 'அங்கிருந்த தண்ணீர் கேனிலிருந்த தண்ணீரை எடுக்க முயற்சித்த குழந்தை ரேவதி சஞ்சனா தலைக்குப்புற அதற்குள் கவிழ்ந்து மூச்சு திணறி இருந்தது' தெரியவந்தது. குழந்தையை கண்டதும் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து குழந்தையை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே, குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தூத்துக்குடி வடபாகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.