சீர்காழி: ஒரே நேரத்தில் கடலில் விடப்பட்ட அரிய வகை ஆலீவர் ரெட்லி ஆமை குஞ்சுகள்!

சீர்காழி: ஒரே நேரத்தில் கடலில் விடப்பட்ட அரிய வகை ஆலீவர் ரெட்லி ஆமை குஞ்சுகள்!
சீர்காழி: ஒரே நேரத்தில் கடலில் விடப்பட்ட அரிய வகை ஆலீவர் ரெட்லி ஆமை குஞ்சுகள்!

சீர்காழி அருகே கூழையாரில் 1000 க்கும் மேற்பட்ட ஆமை குஞ்சுகளை வனத்துறையினர் கடலில் விட்டனர்.

அழிவின் விளிம்பில் உள்ள அபூர்வ வகை ஆமை இனங்களில் ஒன்றான ஆலிவ் ரெட்லி ஆமைகள் நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை மயிலாடுதுறை மாவட்டம் பழையாறு முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்கரைக்கு நள்ளிரவு நேரங்களில் வந்து முட்டையிட்டு அதனை மணலால் மூடிவிட்டு மீண்டும் கடலுக்குச் சென்று விடும். அந்த முட்டைகளை மயிலாடுதுறை மாவட்ட வனத்துறையினர் சேகரித்து கூழையார், தொடுவாய் மற்றும் வானகிரி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆமை முட்டை பொறிப்பகங்களில் வைத்து குஞ்சு பொறித்ததும் அவற்றை கடலில் விடுவது வழக்கம்.

இவ்வாண்டு மயிலாடுதுறை மாவட்ட கடற்கரை பகுதிகளில் 32 ஆயிரம் ஆலிவ் ரெட்லி ஆமை முட்டைகளை சேகரித்த வனத்துறையினர் அதனை பொறிப்பகங்களில் வைத்து பாதுகாத்து வந்தனர். அந்த முட்டைகளில் இருந்து இதுவரையில் 2500 ஆமை குஞ்சுகள் வெளிவந்துள்ளன அவற்றை கடலில் விட்டுள்ளனர் வனத்துறையினர்.

இரண்டாவது கட்டமாக இன்று கூழையார் ஆமை குஞ்சு பொரிப்பகத்தில் வெளிவந்த 1000 க்கும் மேற்பட்ட ஆமை குஞ்சுகளை சீர்காழி வனத்துறையினர் கூழையார் கடற்கரையில் விட்டனர். ஒரே நேரத்தில் கடற்கரையில் விடப்பட்ட ஆயிரக்கணக்கான ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகள் கடலை நோக்கி தவழ்ந்து சென்றது காண்போரை பரவசப்படுத்தியது. இவ்வாண்டு வழக்கத்தைவிட அதிக அளவு ஆமைகள் மயிலாடுதுறை மாவட்ட கடற்கரைக்கு வந்து முட்டையிட்டு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com