அரூர் வேளாண் கூட்டுறவு சங்கத்தில் 2300 மூட்டை மஞ்சள் சுமார் ரூ.1.10 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் அரூர் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் வாரந்தோறும் மஞ்சள், பருத்தி, கொப்பறை தேங்காய் ஆகியவை ஏலம் விடப்படுகிறது. இதில் உற்பத்தியாளர்கள் கொண்டு வரும் விளைபொருட்களை மொத்த வியாபாரிகள், மில் உரிமையாளர்கள் நேரடியாக வந்து வாங்குவதால், விவசாயிகளுக்கு அதிக விலை கிடைக்கிறது. இங்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மஞ்சள் ஏலம் நடைபெறும்.
இந்த ஏலத்தில் அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், கோபிநாதம்பட்டிகூட்ரோடு, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், பொம்மிடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து மஞ்சள் விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் 2300 மூட்டை மஞ்சளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.நேற்றைய ஏலத்தில் குண்டு மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ,6,809 முதல் 7,599-க்கும், விரலி மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.7009 முதல் 9,202-க்கும் விலை போனது.
நேற்றைய மஞ்சள் ஏலத்தில் 2300 மூட்டை மஞ்சள் சுமார் ரூ. 1 கோடியே 10 லட்சத்திற்கு ஏலம் போனது. கடந்த வாரம் 1800 மூட்டை மஞ்சள் ரூ.90 இலட்சத்திற்கு ஏலம் போனது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் மஞ்சள் வரத்தும், விலையும் அதிகரித்துள்ளது. மேலும் அடுத்த வாரம் மஞ்சள் வரத்தும், விலையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
( தகவல்கள் - விவேகானந்தன் செய்தியாளர் )