பொள்ளாச்சியில் விலை உயர்ந்த சைக்கிள்களை திருடி விற்பனை செய்த டியூசன் மாஸ்டர் பார்த்திபன் உள்ளிட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக விலை உயர்ந்த சைக்கிள்கள் காணமல் போவது தொடர் கதையாக இருந்து வந்தது. வர்த்தக நிறுவனங்களுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்படும் சைக்கிள்கள், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சைக்கிள்கள், பள்ளி மாணவர்கள் டியூசன் செல்லும்போது அங்கு நிறுத்தி வைக்கப்படும் சைக்கிள்கள் என விலை உயர்ந்த சைக்கிள்கள் அடிக்கடி மாயமாகி வந்தது. விலை உயர்ந்த சைக்கிள்களை மட்டும் குறிவைத்து மர்மநபர்கள் யாரோ திருடிச் சென்றது அப்பகுதி மக்களிடையே பெரும் சந்தேகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
எனவே இதுகுறித்து சைக்கிளை பறிகொடுத்தவர்கள் மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டு இருந்த இடங்களில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் சில நபர்கள் சைக்கிள்களை லாவகமாக திருடிச்சென்றது தெரியவந்தது. பின்னர் அதன் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார் நேற்று கோட்டாம்பட்டி பகுதியில் சைக்கிளுடன் சென்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர்.
அப்போது அவர் மகாலிங்கபுரம் பகுதியில் டியூசன் நடத்தி வரும் பார்த்திபன் என்பது தெரியவந்தது. இவர் டியூசனுக்கு வரும் சில மாணவர்களிடம் சைக்கிள்களை திருடி வருமாறு கூறுவார். அப்படி அந்த மாணவர்கள் சைக்கிளை திருடி வந்தவுடன், இவரது நண்பர் லோகுராஜ் என்பவரிடம் அதனை விற்பனை செய்வது தெரியவந்தது.
பின்னர் இருவரையும் கைது செய்த போலீசார், பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்த 30க்கும் மேற்பட்ட சைக்கிள்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மாணவர்களை பயன்படுத்தி டியூசன் மாஸ்டர் சைக்கிள்களை திருடி வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.