"அதிகார போதை, பதவி வெறி, அற்பப் பிறவி.." -சி.வி.சண்முகத்தை கடுமையாக சாடிய டிடிவி தினகரன்

"அதிகார போதை, பதவி வெறி, அற்பப் பிறவி.." -சி.வி.சண்முகத்தை கடுமையாக சாடிய டிடிவி தினகரன்

"அதிகார போதை, பதவி வெறி, அற்பப் பிறவி.." -சி.வி.சண்முகத்தை கடுமையாக சாடிய டிடிவி தினகரன்
Published on

'தங்கள் வாயாலேயே தாங்கள் அடிமைகளாக இருந்தோம் என அவர்களை அவர்களாகவே தரம் தாழ்த்திக்கொள்வது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது' என டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று விழுப்புரத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் டிடிவி தினகரனை கடுமையான வார்த்தைகளால் தாக்கிப் பேசினார். ''அதிமுகவை கைப்பற்றுவது இருக்கட்டும். முதலில் சசிகலாவுக்கு நான் எச்சரிக்கை விடுகிறேன். டி.டி.வி. தினகரன் குடும்பத்தில் இருந்து சசிகலா தன்னை காப்பாற்றி கொள்ளவேண்டும். டிடிவி தினகரனை நம்பித்தான் சசிகலா கட்சியையும் ஆட்சியையும் ஒப்படைத்து விட்டுச் சென்றார். ஆனால் அவர் ஒரே மாதத்தில் அதை உடைத்துவிட்டார். நான் நிதானமாக பேசுகிறேனா என்று டிடிவி தினகரன் கேட்கிறார். ஆமாம் இவர்தான் எனக்கு 'ஊத்திக்' கொடுத்தார். அவரோட தொழிலே 'ஊத்திக்' கொடுப்பதுதான். ஊத்திக் கொடுத்தே குடியை கெடுத்தவர்கள் அவர்கள்.

கூவத்தூரில் எங்களுக்கு அவர்தான் ஊத்திக் கொடுத்தார். இல்லை என்று அவரை சொல்லச் சொல்லுங்கள். இனி ஒருபோதும் தினகரனையும், சசிகலாவையும் அதிமுகவில் சேர்க்க முடியாது. அ.தி.மு.க. என்பது ஒன்றரை கோடி தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். இனி ஒருபோதும் சசிகலாவின் குடும்பத்தின் பிடியில் சிக்காது'' என்று பேசினார். 

சிவி சண்முகத்தின் இந்த பேச்சை தொடர்ந்து, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், ''நிதானம் இழந்து, தன்னிலை மறந்து, பதற்றத்தில், கோபத்தின் உச்சிக்கே சென்று, பதவி வெறியில் தங்களது பேராசைகள் எல்லாம் நிராசை ஆகிவிடுமோ என்ற பயத்தில் அதிகார போதை கண்ணை மறைக்கும் அளவிற்கு தாங்கள் வகிக்கின்ற பதவியின் மாண்பையும் மறந்து, மனித நிலையிலிருந்து மாறி காட்டு மிருகங்கள் போல கடும் கூச்சலிட்டு வானுக்கும் மண்ணுக்கும் குதிக்கும் ஒரு சில அற்பப் பிறவிகளைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.

பதவி வெறி படுத்தும் பாடு எப்படியெல்லாம் இவர்களைப் பேச வைக்கிறது. தங்கள் வாயாலேயே தாங்கள் அடிமைகளாக இருந்தோம் என அவர்களை அவர்களாகவே தரம் தாழ்த்திக்கொள்வது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது. வாழ்க வசவாளர்கள்!'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com