அமமுக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு

அமமுக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு

அமமுக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு
Published on

சென்னையில் நடந்த கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு செய்யப்பட்டார்.

அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட டிடிவி தினகரன் தனி அணியாக பிரிந்து அமமுக என்ற அமைப்பை உருவாக்கினார். மேலும் அதிமுகவை மீட்டே தீருவோம் எனத் தெரிவித்தார். எனவே அமமுகவை கட்சியாக பதிவு செய்யாமல் இருந்து வந்தார். இதையடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

இதைத்தொடர்ந்து தற்போது நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிட அதே குக்கர் சின்னத்தை டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்தில் கோரினார். ஆனால் தேர்தல் ஆணையம் அந்தச் சின்னத்தை மறுக்கவே நீதிமன்றத்தை நாடினார் தினகரன். அப்போது பதில் அளித்த தேர்தல் ஆணையம் டிடிவி தினகரன் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக பதிவுசெய்யவில்லை எனத் தெரிவித்தது.

இதையடுத்து நீதிமன்ற வலியுறுத்தலின் பேரில் அவர் அணிக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டது. மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் அமமுகவைச் சேர்ந்த வேட்பாளர்கள் சுயேச்சையாக போட்டியிட்டனர். இந்நிலையில், அமமுகவை கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. இதனையடுத்து சென்னை அசோக் நகரில் உள்ள அமமுகவின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு செய்யப்பட்டார். 

டிடிவி தினகரன் தேர்வு குறித்து பேசிய அமமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி, அமமுகவை தனிக் கட்சியாக பதிவு செய்வதற்கான வேலைகள் நடக்கின்றன. சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் அமமுக தலைவராக சசிகலா தேர்வு செய்யப்படுவார் என்று தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com