மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: டிடிவி தினகரன்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை “கொலைக் குற்றவாளியான ஜெயலலிதா” என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி ஸ்டாலின் கூறியதாக குற்றம்சாட்டியுள்ள அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அதற்காக ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தினகரன் விடுத்துள்ள அறிக்கையில், 24.2.2017 அன்று(நேற்று) பத்திரிகையாளிர்களிடம் பேசிய போது, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பேசும்போது “கொலைக் குற்றவாளியான ஜெயலலிதா” என்ற வார்த்தையை ஸ்டாலின் பயன்படுத்தினார் எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்காக மு.க.ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, வாழப்பாடி பழனிசாமி என்றும், காவேரி மேலாண்மை வாரியத்தை காவேரி நடுவர் மன்றம் என பொது இடங்களில் மு.க.ஸ்டாலின் கூறுவதாக தெரிவித்துள்ள டிடிவி தினகரன் இனியும் துண்டுச் சீட்டு துணையின்றி மு.க.ஸ்டாலின் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.