“கொள்கைக்காக வந்தவர்கள் இருக்கிறார்கள், விலை போக கூடியவர்கள் போகிறார்கள்” - தினகரன் பேட்டி
அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனது உறவினரை பார்த்துவிட்டு வெளியே வந்தபோது செய்தியாளர் சந்திப்பொன்றை நிகழ்த்தியிருந்தார். அப்போது அவருடன் நடந்த சிறு உரையாடல் தொகுப்பு இங்கே:
“ஈ.பி.எஸ்,ஒ.பி.எஸ் பிரதமரை சந்தித்திருப்பது எதற்காக என நினைக்கிறீர்கள்?”
“அந்த சந்திப்பை பற்றி ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் ஆகியோரிடம் தான் கேட்க வேண்டும்”
“அ.தி.மு.க - அ.ம.மு.க விரைவில் இணையுமா?”
“அ.தி.மு.க வை மீட்க வேண்டும் என்பது தான் எங்கள் இலக்கு. தேர்தல் வெற்றி தோல்வியை கடந்து எங்கள் இலக்கை நோக்கி தான் நாங்கள் பயணம் செய்கிறோம். அ.தி.மு.க - அ.ம.மு.க இணையுமா என்பது போன்ற யூகங்களுக்கு எங்கள் தரப்பினால் பதில் அளிக்க முடியாது. கொள்கைக்காக என்னுடன் வந்தவர்கள் எல்லாம் என்னுடன் இருக்கிறார்கள். சுயநிலத்திற்காக வந்து விலை போக கூடியவர்கள், விலை போகிறார்கள். அவ்வளவே. அ.தி.மு.கவை மீட்க வேண்டும் என்பது தான் எங்கள் முயற்சியும், சசிகலாவின் முயற்சியும். அதற்கான முயற்சியையே அனைவரும் செய்து வருகிறோம்”
“முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்துவது குறித்து உங்கள் பார்வை...”
“உப்பை தின்றவர்கள் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும். சட்டப்படி நடவடிக்கைகள் எடுத்தால் சரிதான்”
“அ.தி.மு.க இரட்டைத் தலைமையை எப்படி பார்க்கின்றீர்கள்?”
“அ.தி.மு.க கட்சி தொடங்கிய காலம் முதல் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சசிகலா என்கிற ஒற்றை தலைமையில் தான் அ.தி.மு.க இருந்திருக்கிறது. தற்போது அது மாறி உள்ளது. மீண்டும் அது சரியாகும்”
“தி.மு.க ஆட்சியில் மகிழ்ச்சியான விஷயமாக என்ன இருக்கிறதென நினைக்கின்றீர்கள்?”
“அது என்ன என்பதை யோசித்து பின்னர் சொல்கிறேன். ஆனால் ஒன்று... இதுவரை திமுகவினர் எதையெல்லாம் எதிர்த்து போராடினார்களோ, இப்போது அதை அவர்களே செய்கிறார்கள். அந்தவகையில் அவர்கள் சொன்னதை மறந்து செயல்படுகிறார்கள். அப்படிப்பார்த்தால் தி.மு.க ஆட்சியில் மகிழ்ச்சியை விட சிரிப்பு தான் அதிகம் உள்ளது”
- லெனின் சுப்ரமணியன்