ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் முன்னிலை பெற்று வருகிறார்.
முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்ததை அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஓபிஎஸ் தனி அணியாக களமிறங்கினார். எடப்பாடி பழனிசாமியும் டிடிவி தினகரனும் ஓரணியாக நின்று போட்டியிட்டனர். இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. டிடிவி தினகரன் தொப்பி சின்னத்திலும் எடப்பாடி அணியில் மதுசூதனன் இரட்டை மின் கம்பத்திலும் போட்டியிட்டனர். பணப்பட்டுவாடா காரணமாக தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். இதையடுத்து அதிமுகவில் அதிரடி மாற்றங்கள். எடப்பாடி பழனிசாமியும் ஓபிஎஸ்-சும் இணைந்தனர். டிடிவி தினகரன் எதிரியாக்கப்பட்டார். இருவரும் ஒருவரையொருவர் தூரோகி என்று வசைமாறி பொழிந்தனர்.
இந்நிலையில் இரட்டை இலை எங்களுக்கே சொந்தம் என்று எடப்பாடி, ஓபிஎஸ் இணைந்து தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர். பின்னர் அவர்களுக்கே கிடைத்தது, அதிமுகவின் ராசி சின்னமான இரட்டை இலை. இதையடுத்து ஆர்.கே.நகருக்கு மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. டிடிவி தினகரன் அதிமுகவையும் இரட்டை இலையையும் பயன்படுத்த முடியாத நிலையில் சுயேட்சையாக போட்டியிட்டார்.
இப்போது வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. யாரும் எதிர்பார்க்க வகையில் டிடிவி தினகரன் முன்னணியில் இருக்கிறார். எம்.ஜி.ஆரின் நினைவு நாளான இன்று அவரால் உருவாக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை அதிமுக தொண்டர்களே தோற்கடித்திருப்பது துரதிர்ஷ்டம்தான்.