சசிகலாவின் மூத்த சகோதரி வனிதாமணியின் மூத்த மகன்தான் டிடிவி தினகரன்.
திருத்துறைப்பூண்டியில் விவேகானந்தன் - வனிதாமணி தம்பதிக்கு மூத்த மகனாக பிறந்த தினகரன், சசிகலாவின் மூத்த சகோதரர் சுந்தரவதனத்தின் மகளான அனுராதாவை அதாவது தனது மாமன் மகளையே மணம் புரிந்துகொண்டவர்.
1998ம் ஆண்டு, சட்டவிரோதமாக வெளிநாட்டு பணத்தை பெற்ற புகாரின் பேரில் அமலாக்கத் துறையால் தினகரனுக்கு 31 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு பின்னர் அது 28 கோடியாக குறைக்கப்பட்டது.
அதிமுக பொருளாளராக பதவி வகித்துள்ள தினகரன், 1999ம் ஆண்டு பெரியகுளம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போதுதான் ஓ.பன்னீர்செல்வத்துடன் தினகரனுக்கு அறிமுகம் ஏற்பட்டது.
2004ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பெரியகுளத்தில் தோற்றாலும் மாநிலங்களவை உறுப்பினராகி மீண்டும் டெல்லி சென்றார்.
தினகரனின் அரசியல் வாழ்க்கை இப்படி ஏற்றமும் இறக்கமும் நிறைந்ததாக இருந்த நிலையில் 2011ல் சசிகலா உள்ளிட்டோருடன் தினகரனையும் கட்சியை விட்டு நீக்கினார் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா.
அதன்பிறகு நேரடி அரசியலில் இருந்து விலகியிருந்த தினகரன் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மீண்டும் தீவிர அரசியலுக்கு வந்தார். ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநர் மாளிகைக்கு சசிகலாவும் எடப்பாடி பழனிச்சாமியும் சென்ற போது உடன் இருந்தவர் தினகரன். தற்போது அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சிறை செல்லும் நிலையில் மீண்டும் தினகரன் கட்சியில் சேர்க்கப்பட்டு துணைப் பொதுச்செயலாளர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தினகரனுக்கு பாஸ்கரன், சுதாகரன் என இரு இளைய சகோதரர்கள். இவர்களில் சுதாகரன்தான் 1990களில் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக அறிவிக்கப்பட்டவர். தற்போது அவர் சசிகலாவுடன் தண்டனை பெற்று சிறைக்குச் செல்லும் நிலையில், தினகரன் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்புக்கு வந்திருக்கிறார்.