எம்எல்ஏகளை மிரட்டுகிறது காவல்துறை: டிடிவி தினகரன் புகார்
கர்நாடக மாநிலத்திலுள்ள குடகு தனியார் விடுதியில் தங்கியுள்ள தனக்கு ஆதரவான சட்டமன்ற உறுப்பினர்களை தமிழக காவல்துறை அங்கு சென்று மிரட்டுவதாக டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழத்தில் இருந்து 5 காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட காவலர்கள் குடகு சென்றுள்ளனர் என்றும், அங்கு தங்கியுள்ள சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டி வருகின்றனர் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
முதல்வர் எடிப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளிக்காவிட்டால் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது வழக்கு தொடரப் போவதாக மிரட்டி வருகின்றனர். அவ்வாறு ஆதரவளித்தால் 10 கோடி முதல் 15 கோடி வரை வழங்க தயாராக இருப்பதாகப் பேரம் பேசி வருகின்றனர் என்ற தகவலை அவர் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இதேநிலை தொடர்ந்தால் கர்நாடக மாநில காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு விரைவில் சட்டப்படி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றும் கூறியிருக்கிறார்.
ஏற்கனவே எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், ‘ஆளுநரின் கால தாமதம் குதிரை பேரத்திற்கு வழி வகுக்கும்’ என்று கூறியிருந்த வேளையில் டிடிவி தினகரனின் இந்தப் பகிரங்க குற்றச்சாட்டு தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.