'அதிமுக ஒரு கம்பெனி; மு.க.ஸ்டாலின் கூட அங்கே பொதுச்செயலாளர் ஆகலாம்' - டிடிவி தினகரன்

'அதிமுக ஒரு கம்பெனி; மு.க.ஸ்டாலின் கூட அங்கே பொதுச்செயலாளர் ஆகலாம்' - டிடிவி தினகரன்
'அதிமுக ஒரு கம்பெனி; மு.க.ஸ்டாலின் கூட அங்கே பொதுச்செயலாளர் ஆகலாம்' - டிடிவி தினகரன்

''அதிமுக கம்பெனி போல ஆகிவிட்டது, யார் அதிகமாக இன்வெர்ஸ்ட் பண்ணுகிறாரோ அவர் தலைமை ஆகி விடலாம், ஸ்டாலின் நினைத்தால் கூட அங்கே பொதுச்செயலாளர் ஆகிவிடலாம்'' என்று விமர்சித்துள்ளார் டிடிவி தினகரன்.

மதுரை விரகனூர் ரிங் ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், அதன் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதுரை வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது, கட்சியை வலுப்படுத்துவது, அமைப்பு ரீதியாக உறுப்பினர்களை சேர்ப்பது, 23 அணிகளுக்கு நிர்வாகிகள் நியமிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசுகையில், கன்னியாகுமரி முதல் ஒசூர் வரை 234 தொகுதிகளிலும் அமமுகவிற்கு கட்டமைப்பை உருவாக்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். தொண்டர்களை வைத்து ஜெயலலிதாவின் திருப்பெயரிலயே அமமுக செயல்பட்டுவருகிறது. பணத்தை தண்ணீராக செலவு செய்து மக்களின் வரிப்பணத்தை தண்ணீராக செலவு செய்து கொண்டிருந்தவர்கள் இன்றைக்கு தலைமைக்கழக பதவிக்கு வந்துள்ளார்கள். தலைமைப்பதவியை ஏலம் போட்டு ஜெயலலிதாவுக்கும் எம்ஜிஆருக்கும் அசிங்கம் ஏற்படுத்தி நீதிமன்றத்தில் குடுமிபிடிச்சண்டை போட்டுக்கொண்டுள்ளனர்.

வைத்தியலிங்கம் கூறியிருக்கிறார் காசு கொடுத்து தான் எடப்பாடி பழனிச்சாமி தலைமை பதவியை ஏலம் போட்டுள்ளார். உண்மையான இயக்கம் தொண்டர்களால் இயக்கப்படுகிற இயக்கம் அமமுக. அதிமுகவில் உடல் அங்கேயும் உள்ளம் இங்கேயும் கொண்டுள்ளவர்கள் விரைவில் நம்மிடம் வந்து சேரப்போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை. விரைவில் வந்து சேர்வார்கள். மக்கள் பணத்தை தின்றவர்கள் உப்பை தின்றவர்களாக, வினை விதைத்தவர்களாக தற்போது தங்களை காத்துக்கொள்ள ஏதேதோ செய்கிறார்கள். அதிமுகவை நினைக்க வேண்டிய அவசியம் அமமுகவிற்கு இல்லை. 

யார் காலையாவது பிடித்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக, தலைமை பதவியை தவறான பணத்தின் மூலம் கிடைக்கச் செய்துள்ளனர்.  இது அவருக்கு உதவி செய்யப்போவதில்லை. அதிமுக கம்பெனி போல ஆகிவிட்டது, யார் அதிகமாக இன்வெர்ஸ்ட் பண்ணுகிறாரோ அவர் தலைமை ஆகி விடலாம், ஸ்டாலின் நினைத்தால் கூட அங்கே பொதுச்செயலாளர் ஆகிவிடலாம் என்ற அவல நிலைதான் உள்ளது.

ஆர்.கே.நகர் தேர்தல் முடிந்த பின் அம்மாவின் பெயரில் கட்சியை தொடங்கவேண்டும் என எண்ணினேன். ஜெயலலிதா மறைவிற்கு பின் நடந்தது அம்மாவின் ஆட்சியும் அல்ல; கட்சியும் அல்ல. ஜெயலலிதா இறந்த பிறகு ஜெயலலிதா கட்சி ஜெயலலிதா ஆட்சி இது இல்லை என தெரியும். இருந்தாலும் ஊர் நம்மை எதுவும் குற்றம் குறை சொல்லி விடக்கூடாது என ஆட்சி அதிகாரத்தை அமைத்து கொடுத்தோம்.ஜெயலலிதா ஆட்சியை தவறாக செய்தார்கள்' அதனால் அவர்களை கண்டித்தேன். ஆர்.கே. நகரில் தேர்தலில் நிற்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை.

அந்த காலகட்டத்தில் தளவாய் சுந்தரம் போன்றோர் தான் பொதுச்செயலாளர் சசிகலாவை சந்தித்து என்னை தேர்தலில் நிற்க வேண்டும் என கூறினார்கள். அப்போது தான் எடப்பாடி பழனிச்சாமிக்கு நான் தலைமைக்கு வந்துவிடுவேன் என்ற பயம் வந்தது. எடப்பாடி அணியினரை ஊழல் செய்யாதீர்கள் என்று சொன்னேன்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை. அதனால்தான் தனிக்கட்சி்தொடங்க எண்ணினேன்.

தற்போது எடப்பாடி அணியினர் செய்த ஊழலுக்கு நாள்தோறும் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். காக்கிச்சட்டைக்கே அஞ்சும் எடப்பாடி அணியினர் லஞ்ச ஒழிப்புத்துறை என்றால் என்ன செய்வார்கள். எடப்பாடி அணிக்கு மடியிலயே டன் கணக்கில் பயம் உள்ளது. பதவியை காப்பாற்ற மட்டுமே உள்ளனர், தொண்டர்களையோ, ஜெயலலிதாவின் ஆட்சியையோ காப்பாற்ற மாட்டார்கள்

வினை விதைத்தவர்கள். வினை அறுப்பான் என்ற நிலையை அனுபவிப்பார்கள். நம்பிக்கை துரோகத்திற்கு மன்னிப்பு இல்லை, நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் அவர்களது காலத்திலயே அழிந்துபோவார்கள். என்னுடன் இருந்த பலர் தேர்தலில் தோற்றாலும் சோர்ந்து போகவில்லை. பதவி என்பதை எதிர்பார்த்தவர்கள் தான் நம்மிடம் இருந்து ஓடிவிட்டனர். அமமுக ஆட்சிக்கு வந்தால்தான் ஜனநாயக முறைப்படி அதிமுகவை மீட்க. முடியும். 5வருடத்தில். 3 பொதுச்செயலாளரை மாற்றிவிட்டார்கள்'' என்று கூறினார்.  

இதையும் படிக்க: துப்பாக்கி சுடும் போட்டி: நடிகர் அஜித் அணி அசத்தல் - எத்தனை பதக்கங்களை அள்ளினார்கள்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com