டிடிவி தினகரன் மீதான வழக்கு... இடைக்காலத் தடை நீட்டிப்பு
திருச்சி எம்.பி குமாரின் புகார் அடிப்படையில் டிடிவி தினகரன் மற்றும் நடிகர் செந்தில் மீதான வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடையை அக்டோபர் 23வரை நீட்டித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சி தொகுதி அதிமுக எம்.பி. குமார் அளித்த புகாரின் பேரில் டிடிவி தினகரன், நடிகர் செந்தில் ஆகியோர் மீது பொதுஇடத்தில் ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் திருச்சி மாநகர குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் செந்தில் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று இந்த வழக்கு நீதிபதி சுந்தர் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டது. இதையேற்ற நீதிபதி வழக்கை அக்டோபர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும், அதுவரை வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்தும் உத்தரவிட்டார்.