மதுரையில் பெண்ணை பாலியல் தொழிலில் சிக்க வைக்க முயற்சி !
வேலை வாங்கி தருவதாகக் கூறி பாலியல் தொழிலில் பெண்ணை சிக்க வைக்க முயன்ற சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 35 வயதான உஷா. இவருடைய கணவர் பரமசிவம். இவர் திருப்பூரில் பணியாற்றி வந்த நிலையில் ஊரடங்கின் காரணமாக அவர் அங்கேயே சிக்கிக் கொண்டதாகத் தெரிகிறது. இந்நிலையில் ஊரடங்கால் திருப்பூரில் சிக்கிக்கொண்ட தனது கணவரை சந்திக்க திருவாரூர் மாவட்டத்திலிருந்து திருப்பூருக்கு உஷா சென்றுள்ளார். இதனிடையே கரூர் பேருந்து நிலையத்தில் உஷாவுக்கு பேருந்து கிடைக்காததால், அங்கேயே தங்கிவிட்டு காலை திருப்பூருக்கு செல்ல நினைத்துள்ளார். அப்போது ராமாயி என்பவர் கரூரிலிருந்து மதுரை செல்வதாக கூறி உஷாவிடம் அறிமுகமாகியுள்ளார்.
மேலும் தன்னுடன் மதுரைக்கு வந்தால் நல்ல வேலை ஒன்று உள்ளதாகவும், மாதம் 15,000 ரூபாய் சம்பளம் எனவும் தங்க வீடு, உணவு இலவசம் எனக்கூறி ஆசை வார்த்தைகளைக் கூறி உஷாவை மதுரைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து மதுரை செல்லூர் மருதுபாண்டியர் நகரில் உள்ள வீட்டில் உஷாவைத் தங்க வைத்த ராமாயி உஷாவை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த இரவு நேரத்தில் பல நபர்களை அந்த வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.
அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டிற்கு வருவதை கண்டு அதிர்ச்சியடைந்த உஷா அங்கிருந்து தப்பித்து, பொதுமக்கள் உதவியை நாடியுள்ளார். பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்திய நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சமடைந்த பெண்ணை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ரெட் கிராஸ் அமைப்பினர் மீட்டு அவரை சொந்த மாவட்டத்திற்கு பத்திரமாக அனுப்பி வைத்துள்ளனர்.