”அதிமுகவின் உண்மையான விசுவாசிகள் கட்சியில் இருந்து விலகுவது கிடையாது” - தங்கமணி
”அதிமுகவின் உண்மையான ஒரு தொண்டர் கூட அதிமுகவில் இருந்து விலகுவது கிடையாது” என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
தமிழகத்தில் காலியாக உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க சார்பில் போட்டியிட விரும்புவோரிடம், விருப்ப மனு வாங்கும் பணி இன்று துவங்கியது. இதனையொட்டி, நாமக்கல் மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட உள்ளவர்களுக்கான விருப்ப மனுக்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான தங்கமணி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினருக்கு விருப்ப மனுக்களை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, ”நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அதிமுகவினர் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர். ஏற்கனவே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பணம் கட்டியவர்கள் மீண்டும் கட்ட தேவையில்லை. அதற்கான ரசீது வைத்து இருந்தாலே போதுமானது” என்றவர்,
“அதிமுகவில் இருந்து ஒரு சிலர் சொந்த ஆதாயத்திற்காகவும் நிர்பந்தத்தின் காரணமாகவும் மாற்றுக் கட்சிக்கு செல்கின்றனர். ஆனால், அதிமுகவின் உண்மை விசுவாசியான ஒரு தொண்டன்கூட இந்தக் கட்சியில் இருந்து விலகுவது கிடையாது. தொண்டர்கள் அனைவருமே அதிமுகவில் உள்ளனர்” என்று தெரிவித்தார்.