மாநிலங்களவை உறுப்பினராவதில் வைகோவிற்கு சிக்கல்?
மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை திமுக சார்பில் மதிமுக பெற்றாலும், வைகோ தேர்வாக அவர் மீது திமுக தொடர்ந்த ஒரு வழக்குத் தடையாக இருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'நான் குற்றஞ்சாட்டுகிறேன்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மதிமுக பொதுச்செயலாலர் வைகோ பேசியது தொடர்பாக, 2009-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கில் ஜூலை 5-ஆம் தேதி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்தத் தீர்ப்பு வைகோவுக்கு பாதகமாக வரும் பட்சத்தில், மதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராவதில் அவருக்கு சிக்கல் எழும் நிலை உள்ளது.
எனவே வேறு வேட்பாளர் யார் என்பது குறித்து ஆலோசிக்கும் சூழலில் மதிமுக உள்ளது. இந்நிலையில், மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டமும், உயர்நிலை ஆலோசனைக் கூட்டமும் நாளை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற உள்ளது. அப்போது இதுதொடர்பாக ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. முன்னதாக, புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய வைகோ அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி குறித்து விமர்சித்திருந்தார்.
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். கடந்த மக்களவைத் தேர்தலின்போது செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மதிமுகவிற்கு திமுக ஒரு மாநிலங்களை உறுப்பினர் பதவியை விட்டுக்கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

