ஆற்றில் மூழ்கி மணல் திருடும் இளைஞர்கள் : அதிர்ச்சி.. அவலம்..
கடலில் மூச்சடக்கி முத்துக்குளிப்பது போல திருச்சி காவிரியாற்றில் இறங்கி இளைஞர்கள் மணல் எடுப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி கம்பரசம்பேட்டை பெரியார் நகரில் உள்ள மாநகராட்சி நீரேற்று நிலையம் அருகே மணல் திருட்டு தொடர்ந்து நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. தற்போது அங்கு வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், ஆபத்தை உணராமல் இளைஞர்கள் மணல் எடுக்கின்றனர். வேலை இல்லாத காரணத்தால் தினமும் 4 மணி நேரம் நீரில் மூழ்கி இளைஞர்கள் மணல் எடுப்பதாக கூறப்படுகிறது.
இளைஞர்கள் சட்டவிரோதமாக மணல் அள்ளும் காட்சிகளும், காவல்துறையினர் அங்கு வந்து செல்லும் காட்சிகளையும் புதிய தலைமுறை பதிவு செய்துள்ளது. மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுப்பதோடு இளைஞர்களின் மறுவாழ்விற்கு அரசு உதவ வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.