“எனக்கு 3 வயதில் இருந்தே மனநோய் இருந்தது” - விபரீத முடிவு எடுத்த விஏஓ-ன் 3 பக்க கடிதம்!

“எனக்கு 3 வயதில் இருந்தே மனநோய் இருந்தது” - விபரீத முடிவு எடுத்த விஏஓ-ன் 3 பக்க கடிதம்!
“எனக்கு 3 வயதில் இருந்தே மனநோய் இருந்தது” - விபரீத முடிவு எடுத்த விஏஓ-ன் 3 பக்க கடிதம்!

திருச்சி மாவட்டம் மணப்பாறையில், மனநோயால் பாதிக்கப்பட்டிருந்த கிராம நிர்வாக அலுவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை மடுவங்கரையை சேர்ந்த விரிவாக்க கல்வியாளராக பணியாற்றி வந்த ராதாகிருஷ்ணன் 2002 ஆம் ஆண்டு பணியிலிருந்தபோது உயிரிழந்தார். அவரது வாரிசுக்கான வேலையாக அவரது மகன் சுவாதிபிரகாஷ் (39) கடந்த 2018-ஆம் ஆண்டு கிராம நிர்வாக அலுவலராக பணியினை தொடங்கியுள்ளார். மணப்பாறை அடுத்த மருங்காபுரி வட்டம் தாதனூர் கிராமத்தில் பணியாற்றி வந்த சுவாதிபிரகாஷிற்கு, திருமணமாகி அஸ்வினி (34) என்ற மனைவியும், 8 வயதில் மகனும் உள்ளனர். குடும்ப பிரச்சனையில் மனைவி, குழந்தையை விட்டு பிரிந்து தனது தாயுடன் மணப்பாறை பாரதியார் நகர் பகுதியில் சுவாதிபிரகாஷ் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு முதல் சுவாதிபிரகாஷ் வீட்டில் தனியாக இருந்துவந்துள்ளார். காலை வெகுநேரமாக அவர் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் சுவாதிபிரகாஷ் இருந்துள்ளார். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற காவல் உதவி ஆய்வாளார் செல்வராஜ் தலைமையிலான போலீஸார் கதவை உடைத்து உள்ளே சென்று சுவாதிபிரகாஷ் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சுவாதிபிரகாஷ் தூக்கில் தொங்கிய அறையில் தொலைக்காட்சி பெட்டி இயக்கத்திலேயே இருந்தது. மேலும் அருகே சோபாவில் சுவாதிபிரகாஷ் எழுதி வைத்திருந்த 3 பக்க கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றினர். அதில், தனக்கு சிறுவயதிலிருந்தே ஸ்கிசோஃப்ரினியா (Schizophrenia) என்ற மன நோய் இருந்ததாகவும், அதற்கு சென்னையில் மருத்துவம் பார்த்து வந்ததாகவும் பின்னர் வளநாடு பகுதியில் வேலை கிடைத்ததால் சிகிக்சையை தொடராமல் மன அழுத்ததில் இருந்து வந்ததால் குடிப்பழத்திற்கு ஆளாகி மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்திருக்கிறார்.

இதுபோன்ற காரணங்களால், தன்னால் இனிமேல் வாழ முடியாது என்றும், தனது இறப்பிற்கு எதிர்மறை எண்ணங்களே காரணம் என்றும் அவர் எழுதி வைத்துள்ளார் என்றும் காவல்துறையினர் முதர்கட்டமாக தெரிவிக்கின்றனர். மேற்கொண்டு இச்சம்பவம் குறித்து மணப்பாறை போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com