திருச்சி: கொரோனா சிகிச்சை மையத்தில் இருந்த இருவர் தற்கொலை முயற்சி ஒருவர் உயிரிழப்பு
கொரோனா சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் சிகிச்சை பெற்று வந்த இருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சியில் ஈடுபட்டனர். இதில் ஒருவர் உயிரிழந்தார்.
திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (41). இவருக்கும் இவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கடந்த 27ம் தேதி முதல் என்ஐடி வளாகத்தில் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு ஆரோக்கியராஜ் இந்த வளாகத்தில் உள்ள 2வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதில், அவருக்கு இடது தொடை மற்றும் கீழ் தாடையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் சிவராசு, சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், நடத்திய விசாரணையில் ஆரோக்கியராஜ் குடி பழக்கத்திற்கு அடிமையாகி அதற்கான சிகிச்சை பெற்று வருவதாகவும், இதனால் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக ஆரோக்கியராஜ் மனைவி தெரிவித்துள்ளார்.
இதேபோல் திருச்சி கருமண்டபம் அடுத்த தீரன் நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (27). சில தினங்களுக்கு முன்பு இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் தனிமைப்படுத்த முகாமில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் விரக்தியடைந்த அவர் திடீரென மாடியில் இருந்து கீழே குதித்தார்.
இதில், காயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த 23ஆம் தேதி வீடு திரும்பினார். இந்நிலையில் கோவிந்தராஜ் திடீரென அவர் aபரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.