சமயபுரம் கோயில் யானை ‘மசினி’க்கு மதம் பிடித்தது: பாகன் பலி
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் யானைக்கு மதம் பிடித்துள்ளது. தற்போது கோயில் வளாகத்திற்குள் சுற்றிவரும் அந்த யானையை அமைதிப்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் யானை ‘மசினி’. இந்த யானைக்கு எதிர்பாராதவிதமாக திடீரென இன்று மதம் பிடித்தது. மதம் பிடித்தவுடன் கோயில் வளாகத்தை சுற்றி சுற்றி அந்த யானை வந்தது. அப்போது பாகன் கஜேந்திரன் யானையை சமாதானப்படுத்த முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் கோபத்தில் இருந்த யானை மசினி, கஜேந்திரனை மிதித்தே கொன்றது. இதனால் கஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
யானை வெளியே ஓடிவராமல் இருக்க தற்போது கோயிலின் நடை சாத்தப்பட்டுள்ளது. அதனால் கோயில் வளாகத்திற்குள் யானை சுற்றி சுற்றி வருகிறது. யானையை அமைதிப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பக்தர்கள் யாரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படாத நிலையில், யானையை அமைதிப்படுத்த தர்ப்பூசணி, பழங்கள் ஆகியவற்றை கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.