\
pori
poript web

ஆயுத பூஜையில் களைகட்டாத பொரி விற்பனை: வியாபாரிகள் கலக்கம்

விலைவாசி உயர்வால் திருச்சி மாவட்டத்தில் பொரி விற்பனை கடுமையாகச் சரிந்துள்ளதாக, பொரி பட்டறை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Published on: 

விலைவாசி உயர்வால் திருச்சி மாவட்டத்தில் பொரி விற்பனை கடுமையாகச் சரிந்துள்ளதாக, பொரி பட்டறை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். விற்பனை பாதியாகக் குறைந்துள்ளதால், நஷ்டத்தை எப்படி சமாளிக்கப் போகிறோம் என வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.

ஆயுத பூஜை என்றாலே வழிபாட்டிலும் கொண்டாட்டங்களிலும் முதலில் இடம்பிடிப்பது பொரிதான். வருடத்தின் எல்லா நாட்களிலும் கடைகளில் பொரி கிடைத்தாலும், ஆயுத பூஜையின்போது கிடைக்கும் பொரி என்றும் ஸ்பெஷல்தான். அதனாலேயே, ஆயுத பூஜை சீசன் வந்துவிட்டாலே பொரிப் பட்டறைகளில் தயாரிப்பு இருமடங்காகிவிடும். அதன்படியே, இந்த ஆண்டும் திருச்சி மாவட்டம் மணப்பாறை, பொத்தமேட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பொரி தயாரிக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன.

அரிசி விலை கிலோவுக்கு 15 ரூபாய் வரை உயர்வு, மின் கட்டண உயர்வு, தேங்காய் மட்டை விலை மற்றும் தொழிலாளர் ஊதிய உயர்வு என உற்பத்திச் செலவுகள் அதிகரித்ததன் காரணமாக, பொரி மூட்டைகளின் விலையை உயர்த்தும் நிலைக்கு, பட்டறை உரிமையாளர்கள் ஆளாகியுள்ளனர். இதன் காரணமாக, ஒரு மூட்டை பொரியின் விலை கடந்த ஆண்டைவிட 100 ரூபாய் அதிகரித்து, 550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால், விற்பனை பாதியாகக் குறைந்துள்ளதாகப் பட்டறை உரிமையாளர்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.

பண்டிகைக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில், விற்பனை அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பில் வியாபாரிகள் தவம் கிடக்கின்றனர். இனிவரும் காலங்களில், பொரி உற்பத்தியாளர்களுக்கு அரிசி மற்றும் மின்சாரத்தை மானிய விலையில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com