திருச்சி: தொடர் கனமழையால் 500 வீடுகளுக்குள் நீர்; படகு மூலம் மக்களை மீட்கும் பணி தீவிரம்
திருச்சி மாநகரில் 500 வீடுகள் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை காரணமாக கோரையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக திருச்சி குழுமணி சாலையில் உள்ள செல்வநகர், அரவிந்த் நகர், சீதாலட்சுமி நகரில் உள்ள 500க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து அப்பகுதியில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று பெய்த கன மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோரையாற்றின் இரு கரையும் தொட்டு வெள்ளநீர் சீறிப் பாய்ந்து செல்கிறது. இதனால் திருச்சி மாநகர் பகுதிகளில் மழைநீர் புகுந்து உள்ளது. குறிப்பாக கருமண்டபம் பொன் நகர், இனியானூர் வர்மா நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் வீடுகளை சூழ்ந்துள்ளது.
திருச்சியிலிருந்து மணப்பாறை வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள், கருமண்டபம் பகுதியில் மழைநீரில் கடந்து செல்ல சிரமப்படுகின்றன. சாலைகள் முழுவதும் பள்ளமாகிவிட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குழுமணி சாலையிலுள்ள செல்வநகர், அரவிந்த் நகர், சீதா லட்சுமி நகர் புதிய குடியிருப்புகளை சூழ்ந்துள்ள நீரில் சிக்கிய 40 பேரை திருச்சி தீயணைப்பு நிலைய மேலாளருக்கு மெல்யுகிராஜா தலைமையில் 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பகுதிகளில் தாழ்வான இடங்களிலுள்ள குடியிருப்புகளை தொடர்ந்து மழை நீரானது சூழ்ந்து கொண்டே இருக்கிறது. நீரின் மட்டம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
- வி.சார்லஸ்