திருச்சி நகை கொள்ளையில் ஈடுபட்டவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள்!

திருச்சி நகை கொள்ளையில் ஈடுபட்டவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள்!

திருச்சி நகை கொள்ளையில் ஈடுபட்டவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள்!
Published on

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் ரூ. 13 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்தவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
 
திருச்சி மலைக்கோட்டை மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் அருகே லலிதா ஜுவல்லரியின் கிளை உள்ளது. 3 அடுக்கு கட்டடத்தில் இயங்கி வரும் இந்தக்கடை 24 மணி நேரமும் காவலாளிகளின் கண்காணிப்பில் இருக்கும். கடையின் பின்புறம் புனித ஜோசப் பள்ளி உள்ளது. கடை மற்றும் பள்ளி வளாகத்துக்கு இடையே ஒரு சுவர் மட்டுமே இருக்கிறது. இந்நிலையில் செவ்வாய்கிழமை இரவு வழக்கம் போல் ஊழியர்கள் கடையை மூடிவிட்டுச் சென்றனர். காலையில் வந்து பார்த்த போது தரைத்தளத்தில் இருந்த தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தன.

கடையின் சுவரில் ஒரு ஆள் நுழையும் அளவிற்கு துளையிட்டு கொள்ளையர்கள் உள்ளே புகுந்துள்ளனர். இரவுப் பணியில் இருந்த 6 காவலாளிகளும் கடையின் முன்பக்கம் இருந்ததால் பின்புற பக்கவாட்டு சுவர் வழியாக கொள்ளையர்கள் நுழைந்தது அவர்களுக்கு தெரியவில்லை எனக் கூறப்படுகிறது. அங்கு சிசிடிவி கேமராவும் இல்லை.  காலாண்டு விடுமுறை என்பதால் புனித ஜோசப் பள்ளிக்கு பகல் நேரத்தில் கூட யாரும் வருவதில்லை. மேலும், அப்பகுதியில் அருகில் உள்ள ஒரு அபார்ட்மென்ட் குடியிருப்புவாசிகள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு பயன்படுத்தி வந்துள்ளனர்.
இதையும் கொள்ளையர்கள் நோட்டமிட்டு வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பொம்மை முகமூடி அணிந்த 2 பேர் கடைக்குள் புகுந்து கொள்ளை அடித்திருப்பது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. அதிகாலை 2.11 மணி முதல் 4.28 வரை சுமார் 2 மணிநேரம் கொள்ளையர்கள் கடைக்குள் இருந்துள்ளனர். கைரேகை பதியாமல் இருக்க கையுறைகளை அணிந்திருந்த அவர்கள் மோப்ப நாயிடம் சிக்காமல் இருக்க வழி நெடுகிலும் மிளகாய்ப் பொடியை தூவிச் சென்றுள்ளனர். 

இது தொடர்பாக தீவிர விசாரணையில் இறங்கியுள்ள காவல்துறையினர் 7 தனிப்படையை அமைத்துள்ளனர். கொள்ளை நடந்த நேரத்தில் நடந்த செல்போன் உரையாடல்களை தனிப்படை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளை நடந்த இடத்தில் கிடைத்த ஆதாரங்களை காவல்துறையினர் சேகரித்துள்ளனர். 

(காயமடைந்த இளைஞர்)

இந்நிலையில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த வட மாநிலத்தை சேர்ந்த 5 இளைஞர்களிடம் திருச்சி தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்த வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போலீசாரை கண்டு மாடியிலிருந்து குதித்து தப்பியோட முயன்ற போது, காயமடைந்தார். உடனடியாக அவரை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்கள் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்றும் இன்னும் இரண்டு நாட்களில் கொள்ளையர்களை பிடித்துவிடுவோம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com