துப்பாக்கி தொழிற்சாலை பணி ஆள்மாறாட்ட வழக்கு: சிபிஐக்கு மாற்றம்!
திருச்சியில் மத்திய பாதுகாப்பு துறையின் துப்பாக்கி தொழிற்சாலை பணிக்கான தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சியில் மத்திய பாதுகாப்பு துறையின் துப்பாக்கி தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் பல்வேறு பணியிடங்களுக்கு கடந்த 2015ல் தேர்வு நடைபெற்றது. திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற இத்தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றதாக தொழிற்சாலை பொது மேலாளர் ஆரியசக்தி என்பவர் திருச்சி கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து நாக்பூரைச் சேர்ந்த ரேபக்சிபு, கான்பூரைச் சேர்ந்த பரத்சிங் ஆகியோரை 2016ல் கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொழிற்சாலையின் பொதுமேலாளர் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “போலீஸ் விசாரணையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதேபோல் வேறு இரு பணியாளர்கள் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இதனால் இந்த வழக்கையும் சிபிஐக்கு மாற்ற வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பிரகாஷ், வழக்கு தொடர்பான ஆவணங்களை பார்க்கும் போது இந்த மோசடியில் தொடர்புடைய 6 பேர் வட இந்திய மாநிலங்களில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கு சிபிஐ ஊழல் தடுப்பு பிரிவு விசாரணைக்கு மாற்றப்படுகிறது. வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் திருச்சி கே.கே.நகர் போலீஸார் சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.