திருச்சி | பெண்ணின் மூச்சுக் குழாயில் சிக்கியிருந்த ஊசியை அகற்றிய அரசு மருத்துவர்கள்!
செய்தியாளர் - பிருந்தா
திருச்சி ஐ.எம்.ஐ.டி. நகரைச் சேர்ந்த 18 வயது பெண் ஒருவர், தற்செயலாக ஊசியை விழுங்கியுள்ளார். இதையடுத்து அவர், சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக எக்ஸ்ரே எடுக்கப்பட்டு, இரைப்பை குடல் அறுவை சிகிச்சை மருத்துவரிடம் கருத்து பெறப்பட்டது.
இதைத் தொடர்ந்து OGD ஸ்கோபி செய்யப்பட்டு, உணவுக்குழாயில் ஊசி இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மார்புடன் கூடிய CT கழுத்து எடுக்கப்பட்டு, மூச்சுக்குழாயில் ஊசி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மறுநாள் 06ம் தேதி காலை மயக்க மருந்தின் கீழ் RIGID பிராங்கோ ஸ்கோபியை பயன்படுத்தி ஊசி அகற்றப்பட்டது.
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையின் மருத்துவக் குழு, முதல்வர் டாக்டர் குமரவேல், கண்காணிப்பாளர் டாக்டர் உதய அருணா, காது, தொண்டை பேராசிரியர் டாக்டர் பாலசுப்ரமணி ஆகியோர் தலைமையில், காது, தொண்டை உதவிப் பேராசிரியர் டாக்டர் அண்ணாமலை, மயக்கவியல் பேராசிரியர் டாக்டர் செந்தில் குமார் மோகன் மற்றும் குழுவினர், அந்தப் பெண்ணுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளித்து அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.