4 பேரை பலி கொண்ட திருச்சி கட்டட விபத்து: உரிமையாளர் கைது
திருச்சி மலைக்கோட்டை அருகே மூன்று மாடிக்கட்டடம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக கட்டடத்தின் உரிமையாளர் கண்ணப்பன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 3 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும், விபத்து ஏற்பட்ட கட்டடத்தின் அருகில் இருந்து, கடந்த மாதம் இடிக்கப்பட்ட கட்டடத்தின் உரிமையாளரான மணிகண்ட நாராயணனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருச்சி மலைக்கோட்டை அருகே தஞ்சாவூர் குளத்தெருவில் நேற்று மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். 5 பேர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆறு மணி நேரத்திற்கு பின்னர் பரமேஸ்வரி எனும் இரண்டு வயது குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. உரிய விதிமுறைகள் பின்பற்றப்படாததும், கட்டடத்தின் அஸ்திவாரம் பலமில்லாததுமே விபத்துக்கு காரணம் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.