திருச்சி | காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் சடலமாக மீட்பு
செய்தியாளர்: பிருந்தா
திருச்சி மாநகரம் புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமன். இவர், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்று வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் தன்னுடைய நண்பர்களான விக்னேஷ், பிரசன்னா மற்றும் பிரவீன் ஆகிய மூவருடன் கம்பரசம்பேட்டை அருகே உள்ள காவிரி ஆற்றின் தடுப்பணையில் குளிக்கச் சென்றுள்ளார். அப்பொழுது நான்கு பேரும் ஆழம் அதிகம் உள்ள பகுதிக்கு சென்றுள்ளனர். இதனால் அவர்கள் நான்கு பேரும் தண்ணீரில் சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் தத்தளித்தனர்.
இதனை பார்த்து அங்கு குளித்துக் கொண்டிருந்தவர்கள் நான்கு பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் ராமனை தவிர மற்ற மூவரையும் அவர்கள் பத்திரமாக மீட்டனர். ராமன் மட்டும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ராமனை தேடும் பணியில் நேற்று முன்தினம் மாலை முதல் ஈடுபட்டு வந்த நிலையில், 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி, பாதிரகுடி என்ற ஊரில் காவிரி ஆற்றில் ராமன் சடலமாக மிதந்தது தெரியவந்தது.
இது குறித்து தகவல் அறிந்த திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று ராமனின் உடலை மீட்டு திருச்சி தீயணைப்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடு;து ராமனின் உடல் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து ஜீயபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.